உண்மையிலேயே நீங்கள் விரும்பாதபோது பாலியல் செயலில் ஈடுபட வேண்டிய அழுத்தத்தை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருந்தால், நீங்கள் பாலியல் வற்புறுத்தலை அனுபவித்திருக்கலாம். யாராவது மற்றொருவரை வற்புறுத்தும்போது அல்லது தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மற்றொரு நபரை உடலுறவுக்கு ஒப்புக்கொள்ளத் தூண்டும்போது இது நிகழ்கிறது. இவ்வற்புறுத்தல் சூழ்ச்சி தந்திரங்களைப் பயன்படுத்துவது போன்று வேண்டுமென்றே இருக்கலாம்; அல்லது மற்ற நபர் உடலுறவுகொள்ள வசதியாக இருக்கிறார் என்று தவறாக கருதுவது போன்ற தற்செயலானதாக இருக்கலாம்.
நோக்கங்கள் வேறுபட்டிருந்தாலும், பாலியல் வற்புறுத்தலின் தாக்கம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்: இதற்கான அனுமதி சுதந்திரமானதாக வழங்கப்படுவதில்லை.
உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பாலியல் வற்புறுத்தலின் இந்த அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் யாருடன் இருந்தாலும், அது உங்கள் இணையாகவோ, க்ரஷ், சாதாரண உறவிலிருப்பவர் அல்லது நீங்கள் சந்தித்த ஒருவராக இருந்தாலும், உடலுறவின் நெருக்கத்தின் அளவை தீர்மானிக்க உங்களுக்கு உரிமை உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
தொடர்ச்சியான அழுத்தம்
பாலியல் வற்புறுத்தல் என்பது நீங்கள் தெளிவாக மறுத்த போதிலும், யாரோ ஒருவர் தொடர்ந்து உடலுறவுக்கு அழுத்தம் கொடுப்பதை உள்ளடக்கும். நீங்கள் அவ்வழுத்தத்தை மென்மையான முறையிலோ அல்லது உறுதியாகவோ நிராகரித்திருந்தால், அவர்கள் உங்கள் விருப்பத்தை மதித்து அதை நிறுத்த வேண்டும். "இல்லை" என்று சொன்ன பிறகும் தொடர்ந்து கேட்பது எல்லை மீறுவதாகும்.
உதாரணமாக:
"வா, இது வேடிக்கையாக இருக்கும்...,வா!" போன்ற கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பது.
நீங்கள் அவர்களின் கையை நகர்த்திய பிறகு உங்களைத் தொடுவது, பின்னர் இச்செயலை மீண்டும் செய்வது.
ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வீர்களா என்று மீண்டும் மீண்டும் கேட்பது.
நீங்கள் இணங்காவிட்டால் உங்களுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவருவதாக அச்சுறுத்துதல்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், இவ்வழுத்தத்தை நிறுத்துவதற்காக மக்கள் தமது ஒப்புதலை வழங்கலாம். இருப்பினும், இது சுதந்திரமாக ஒப்புதல் அளிப்பது போன்றது அல்ல.
திடீர் நகர்வுகள்
நீங்கள் ஒருவருடன் டேட்டிங் செய்தாலும், திடீர் நகர்வுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று அர்த்தமல்ல. ஒரு இணை முதலில் அனுமதியின்றி உங்களைத் தொடவோ அல்லது உங்கள் ஆடைகளை அகற்றவோ தொடங்கினால், அது வற்புறுத்தலின் இன்னுமொரு வடிவமாக இருக்கலாம். இருவரிடையே ஏற்கனவேயுள்ள உறவைத் தாண்டி, இருவரும் அச்சமயத்தில் வசதியாகவும் சம்மதமாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இது போன்ற செயல்கள் ஒருவரை அவர் தயாராக இல்லாத சூழ்நிலையில் அவருக்கு அழுத்தம் கொடுக்கலாம், அது ஒருபோதும் சரியானதல்ல.
உதாரணமாக:
எதிர்பாராத விதமாக உங்களுக்கு ஆபாசத்தைக் காண்பிப்பது.
அவர்களின் ஆடைகளை கழற்றி, நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்பதைக் எதிர்பார்த்தல்.
"நான் வரப்போகிறேன்; சீக்கிரம், இதை (பாலியல் செயலை) செய்யுங்கள்" என்று கூறுதல்.
நீங்கள் உடலுறவு கொள்ள வசதியாக இருக்கிறீர்களா என்பதை முதலில் உறுதிப்படுத்தாமல் ஆணுறை அணிவது, அது நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
சூழ்ச்சி திறத்துடன் கையாளுதல்
உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய உடலுறவு அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அல்லது ஏமாற்றப்பட்டதாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது ஒருவரை வருத்தப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக உடலுறவுக்கு ஒப்புக்கொள்வது எளிதாக இருந்ததா?
அப்படியானால், அது உங்கள் தவறு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுபோல சூழ்ச்சி திறத்துடன் கையாளும் நபர்கள் பெரும்பாலும் அதிகார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறார்கள்; அத்தோடு மோதலை தவிர்க்க மற்றவர்களின் போக்கைப் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
குற்றவுணர்ச்சியில் உங்களை தடுமாறச்செய்தல்
நீங்கள் ஒரு பாலியல் எல்லையை அமைக்கும்போது யாராவது எதிர்மறையாக நடந்துகொண்டால், அவர்கள் உங்களை உடலுறவில் ஈடுபட வைக்க முயற்சிக்கலாம். இந்த நடத்தை கையாளுதலின் ஒரு வடிவம்.
உதாரணமாக:
"நீ என்னை உண்மையாக நேசித்திருந்தால், நீ அதை செய்திருப்பாய்."
"எல்லோரும் செய்கிறார்கள்."
"இது ஒரு சிறிய விஷயம்; இதை ஏன் எனக்காக நீ செய்யக் கூடாது?"
இந்த வார்த்தைகள் பெரும்பாலும் உங்கள் சம்மதத்துடன் உங்களை கையாளவும் அழுத்தம் கொடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் நீங்கள் உங்கள் எல்லைகளில் உறுதியாக நிற்பது முக்கியம்.
இதற்கு முன்னரான முடிவுகள் அல்லது தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், எந்த நேரத்திலும் வேண்டாம் என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது.
உங்களை அவமானப்படுத்துதல் அல்லது தண்டித்தல்
உங்கள் தேர்வுகளின் மீது கட்டுப்பாட்டைப் பெற கையாளுபவர்கள் உங்களை அவமானப்படுத்தும் அல்லது தண்டிக்கும் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தலாம்:
ஒரு பகுதியில் உங்கள் பாலியல் செயல்திறனை அவமதித்தல், அதை மீண்டும் செய்யுமாறு அல்லது வேறு பாலியல் செயலைச் செய்யுமாறு உங்களை வற்புறுத்துதல்.
ஒரு எல்லையைக் கைவிடும்படி உங்களை வற்புறுத்துவதற்காக உங்கள் மீதான அன்பை நிறுத்துவது.
நீங்கள் உடலுறவு கொள்ள ஒப்புக் கொள்ளாவிட்டால் அவர்கள் ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார்கள் என்று கூறுவது.
இந்த நடத்தைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. அத்தோடு எல்லைகளை அமைப்பதற்கான உங்கள் உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன
உங்கள் கடமை உணர்வை அழுத்தத்திற்குட்படுத்தல்
நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறீர்கள் என்று யாராவது உங்களை நம்ப வைக்க முயற்சித்தால் அது வற்புறுத்தல்.
நீங்கள் பாலியல் செயலில் ஈடுபட வேண்டும் அல்லது நீங்கள் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறீர்கள் என்று யாராவது உங்களை வற்புறுத்த முயற்சிக்கும்போது அது வற்புறுத்தலாகக் கருதப்படுகிறது.
உதாரணமாக :
"நீ என் காதலி, எனவே நாம் ஏன் உடலுறவு கொள்ள முடியாது."
"நீங்கள் என்னை கிண்டல் செய்கிறீர்கள். எனக்கு இது கிடைக்காவிட்டால் நான் விரக்தியடைவேன்.
"நாங்கள் இதை முன்பே செய்துள்ளோம்; இப்பொழுது என்ன பிரச்சினை?"
"நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், எனவே நீ ஏன் என்னை இப்படி நடத்துகிறாய்?"
இத்தகைய கருத்துக்கள் உங்கள் கடமை உணர்வுகளைக் கையாளுவதையும், உறவுக்கு ஒப்புக்கொள்ள உங்களை வற்புறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
Love-Bombing (அழுத்தமான அன்பு)
பாலியல் வற்புறுத்தலின் இந்த வடிவம் தீவிரமான பாராட்டுக்களை உள்ளடக்கியது.
"நான் இதற்கு முன்பு யாரையும் பற்றி இப்படி உணர்ந்ததில்லை, இப்போது உன்னை காதலிக்க விரும்புகிறேன்."
"நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்; உன்னுடன் உடலுறவு கொள்வது நமது பிணைப்பை இன்னும் வலுவாக்கும்.
"நான் உன்னுடன் மட்டுமே இருக்க விரும்புகிறேன்; நம் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்"
பாலுறவுக்கு உங்களை தள்ளும் பொருட்கள்
மதுசாரம் அல்லது போதைப்பொருள் உங்கள் பாதுகாப்புகளைக் குறைக்கும். மேலும் இது போன்ற சொற்றொடர்களை நீங்கள் கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்:
"போ, இன்னொரு முறை குடி; வேடிக்கையாக இருக்கும்!"
"விருந்துகளில் என்னுடன் தொடர்ந்து இருக்கக்கூடிய ஒருவரை நான் மிகவும் விரும்புகிறேன்."
இந்த கருத்துக்கள் இப்பொருட்களை உட்கொள்ள உங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியைக் குறிக்கலாம், இது உங்கள் எல்லைகளை எளிதில் புறக்கணிக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும்.
சுற்றுச்சூழலை மாற்றுதல்
இந்த வற்புறுத்தும் விதமான தந்திரோபாயம் எதிர்பாராத விதமாக உங்களை ஒரு அறியப்பட்ட, பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேற்றும் அணுகலுடன் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு உங்களை நகர்த்துவதை உள்ளடக்குகிறது.
உதாரணமாக:
மற்ற நபர் வாகனம் ஓட்டும்போது, நீங்கள் பயணிகள் இருக்கையில் இருக்கிறீர்கள்: "திட்டங்களின் மாற்றம்! உணவகத்திற்கு பதிலாக எங்க வீட்டில் தான் இரவுணவு"
ஒரு விருந்தில் இருக்கும்போது: "இது மிகவும் சத்தமாக இருக்கிறது. எங்கேயாவது அமைதியாக போகலாம்." எனக்கூறி பின்னர், உங்கள் கையைப் பிடித்து காருக்கு வெளியே அழைத்துச் செல்லல்.
உங்கள் சந்திப்பில் வரவேற்பறையில் இருக்கும்போது: "என் இருக்கை வசதியாக இல்லை. படத்தை படுக்கையில் இருந்தே பார்த்து முடிப்போம்" எனக்கூறல்.
உங்களை ஒரு தனியார் இடத்திற்கு அழைத்துச் செல்லும் குற்றவாளிகள் உங்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட அழுத்தம் கொடுக்க அதிகளவான கட்டாய தந்திரங்களைப் பயன்படுத்தலாம். இதைப் பற்றி விழிப்புடன் இருப்பது முக்கியம், எந்த நேரத்திலும் இல்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.
Up-Negotiation மேலோங்கிய பேச்சுவார்த்தை
ஒரு பாலியல் செயலுக்கு ஒப்புதல் அளிப்பது என்பது அந்த குறிப்பிட்ட செயலுக்கு மட்டுமே ஒப்புக்கொள்வதாகும். இருப்பினும், பாலியல் வற்புறுத்தல் பெரும்பாலும் ஒரு முறை மாத்திரம் நிகழும் நிகழ்வு அல்ல; இது காலப்போக்கில் அதிகரிக்கக்கூடும். இது "Up-Negotiation" என்று அழைக்கப்படுகிறது, அங்கு யாரோ ஒருவர் அதிகளவான முறையில் நெருக்கமான செயல்களை ஒப்புக்கொள்ள உங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
உதாரணமாக:
இருக்கையிலிருந்து படுக்கைக்கு செல்ல உங்களை வற்புறுத்துதல், பின்னர் ஆடையிலிருந்து ஆடையின்றி செல்ல உங்களை சமாதானப்படுத்த முயற்சித்தல்.
உங்கள் ஆடைகளை விரைவாக அகற்றி, நீங்கள் ஆடைகளை அவிழ்த்திருப்பதால், நீங்கள் உடலுறவு கொள்ளலாம் என்று பரிந்துரைத்தல்.
அச்சுறுத்தல்கள்
"இல்லை" என்று சொல்ல நீங்கள் மிகவும் பயப்படும்போது, அது பெரும்பாலும் மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தலாக இருக்கும். நீங்கள் அந்த நபரை நிராகரித்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் கவலைப்படலாம். அல்லது அவர்கள் கீழுள்ளது போன்ற விஷயங்களைச் சொல்லலாம்:
"நீங்கள் அதைச் செய்யாவிட்டால், வேறு யாரையாவது நான் தேடிக்கொள்வேன்."
"நீங்கள் விரும்பவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் நான் இந்த உறவை முறிக்க வேண்டியிருக்கும்."
"நீங்கள் மறுத்தால், உங்கள் தனிப்பட்ட விபரங்கள் அல்லது புகைப்படங்களை நான் பகிர்வேன்."
இந்த வகையான வார்த்தைகள் உங்களை ஒப்புக்கொள்ள மிரட்டுவதற்கும், உங்கள் எல்லைகளை பராமரிப்பதை கடினமாக்குவதற்கும் ஆகும்.
நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால்: உங்களை நீங்களே குற்றம் சாட்ட வேண்டாம்
FPA ஸ்ரீலங்கா நிறுவனத்தைச் சேர்ந்த நாம் "உற்சாகமான ஆம்" எனும் அணுகுமுறையை பரிந்துரைக்கின்றோம்: சம்மதம் விருப்பத்துடன் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் எந்த தருணத்திலும் அதனை மீளப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் உடலுறவு பற்றி உற்சாகமாக உணர்கிறீர்கள் என்றால், அது அற்புதமானது - மகிழ்வுடன் அனுபவிக்கவும்! எப்போதும் உங்கள் உள்ளுணர்வைக் கேளுங்கள்: ஏதாவது சரியாக இல்லை என உணர்ந்தால், அது தொடர்பில் பேசவோ அல்லது ஒரு படி பின்வாங்கவோ தயங்க வேண்டாம்.
நீங்கள் உண்மையில் விரும்பாதபோது "ஆம்" என்று சொன்னால், அது உங்கள் தவறு அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உணர்வுகளைச் செயலாக்க நம்பகமான நண்பர் அல்லது ஆலோசகரிடம் பேசுங்கள்.
077 989 5252 என்ற எண்ணினூடாக எமது ஆலோசகருடன் பேசலாம்.