விலகல் முறை, அதாவது "வெளியே இழுத்தல்- pulling out" எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
நீங்கள் ஒரு கர்ப்பத்திற்குத் தயாராக இல்லை என்றால், விலகல் முறையைப் பயன்படுத்துவது பற்றி நீங்கள் இருமுறை சிந்திக்க வேண்டும் (இதன் மூலம் ஆண் விந்து வெளியேறுவதற்கு முன்பு ஆணுறுப்பை கலவிக்கால்வாயிலிருந்து வெளியேற்ற வேண்டும்) ஏனெனில் இது ஒரு பயனுள்ள கருத்தடை முறை அல்ல.
ஏன்? இம்முறையில் நேரம் முக்கியமானது, மேலும் ஆண் சரியான நேரத்தில் வெளியேறுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆண் அதிகப்படியான உற்சாகமடைந்து கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். அத்தோடு விந்தணுக்களைக் கொண்ட திரவம் அல்லது முன்-விந்துதள்ளல் திரவத்திலிருந்து நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு உண்டு.
நினைவில் கொள்ளுங்கள்: ஒரு சூழ் கருத்தரிக்க ஒரு விந்து மட்டுமே தேவை!
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்ட பிறகு எவ்வளவு தூரம் அவசர கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்?
பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு 72 மணி நேரத்திற்குள் (மூன்று நாட்கள்) அவசர கருத்தடை மாத்திரை (ECP) எடுக்கப்பட வேண்டும். எவ்வளவு சீக்கிரம் எடுக்கப்படுகிறதோ, அவ்வளவு பயனுள்ளதாக இருக்கும். பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பின் முதல் 12 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொண்டால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதை வழக்கமான கருத்தடை முறையாகப் பயன்படுத்தக் கூடாது.
உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுக்க யோனியை கழுவும் முறை (douching)உதவுமா?
பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு யோனியை தண்ணீர், நீர்பாய்ச்சும் முறை அல்லது வேறு எந்த திரவத்திலும் கழுவுவது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்காது. மாறாக யோனியில் வைப்பு செய்யப்பட்ட விந்தணுக்கள் கழுவப்படுவதற்கு முன்பு கருப்பையை அடையலாம். douching கர்ப்பம் அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்காது.
நீங்கள் கர்ப்பத்தை திறம்பட தடுக்க விரும்பினால் நிரூபிக்கப்பட்ட கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவது அவசியம்.
பாதுகாப்பற்ற உடலுறவு தீங்கற்றதா?
இரண்டு காரணங்களினால் இல்லை.
பாதுகாப்பற்ற உடலுறவு எப்போதும் திட்டமிடப்படாத கர்ப்பத்திற்கு வழிவகுக்கும். உங்கள் மாதவிடாய் காலத்தில் கூட, நீங்கள் கர்ப்பமடையலாம். நீங்கள் சூழ் வெளியேற்றத்தின்போது அது உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைத்து அந்த நேரத்தில் உடலுறவைத் தவிர்த்தாலும் கூட, சூழ் வெளியேற்றத்தின் போது மாறுபடக்கூடிய பல காரணங்களினால் அது மாற்றமடையக்கூடும். எனவே நீங்கள் எதிர்பார்க்காதபோது நீங்கள் கருவளம் கொண்டிருக்கலாம்.
பாதுகாப்பற்ற உடலுறவு எப்போதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான (STI) ஆபத்தை ஏற்படுத்துகிறது. நீங்களும் உங்கள் இணையும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு சோதனையில் எதிர்மறையான(negative) முடிவைப் பெற்றிருந்தால், உங்கள் இணையின் பாலியல் வரலாற்றை நீங்கள் அறிந்திருந்தால், அதனை நீங்கள் நம்புவீர்களாயின், மேலும் அவர்கள் உங்களுக்கு உண்மையுள்ளவர்கள் மற்றும் உங்களுடன் மட்டுமே உடலுறவு கொள்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருத்தல் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான ஆபத்தை குறைக்க வழிவகுக்கும். கருத்தடை முறை மற்றும் ஆணுறை பயன்படுத்த நாம் பரிந்துரைக்கிறோம்.
பாதுகாப்பற்ற உடலுறவினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் என்ன?
பாதுகாப்பற்ற உடலுறவு, திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் HIV போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. நம்பகமான கருத்தடை முறைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியம் மதிப்புக்குரியது.
ஒரு முறை மட்டுமே என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடலுறவிலிருந்து நான் கர்ப்பம் தரிக்க முடியுமா?
நிச்சயமாக, ஆம்!
பாதுகாப்பற்ற உடலுறவு, தற்செயலான அல்லது "ஒரு முறை" மாத்திரம் என நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நீங்கள் கர்ப்பமாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் உங்கள் மாதவிடாய் காலத்தில் இருந்தாலும் கூட - ஏனெனில் மாதவிடாய் காலத்தில் சில நேரங்களில் கருத்தரித்தளுக்கான வாய்ப்புண்டு. கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி கருத்தடை முறையைப் பயன்படுத்துவதாகும் - ஒவ்வொரு முறையும்!
மாதவிடாய் காலத்தில் நான் கர்ப்பம் தரிக்க முடியுமா?
உங்கள் மாதவிடாய் காலத்தில் கருத்தடை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்த யோசனையல்ல.
உங்கள் மாதவிடாய் காலத்தில் கூட, நீங்கள் கர்ப்பமாக ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது (குறிப்பாக உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருந்தால்). இது உங்களின் மிக வளமான நாட்களைக் கணிப்பதை கடினமானதாக்குகிறது. உங்கள் மாதவிடாய் சுழற்சி காலம் குறைவாக இருந்தால், உங்கள் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் இருந்து கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம். நினைவில் கொள்ளுங்கள், விந்து வெளியேறிய பின் அதனால் 120 மணி நேரம் வரை உயிர் வாழ முடியும். உங்கள் மாதவிடாய் காலத்தின் முடிவில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
எனவே, நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்பவில்லையென்றால், நீங்கள் எப்போதும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.