மாதாந்த வலி!
மாதவிடாய் வலி என்பது மாதவிடாயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும், பொதுவாக இது லேசான வயிற்று மற்றும் முதுகுவலி வடிவில் இருக்கும். இருப்பினும், மாதவிடாய் வலி சில நேரங்களில் மிகவும் கடுமையானதாக இருப்பதோடு, அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. இது சாதாரணமானது அல்ல. இதற்கு ஒரு அடிப்படை காரணம் இருக்கிறதா என்பதை அறிய மேலும் ஆராயப்பட வேண்டும்.
கடுமையான மாதவிடாய் வலிக்கு ஒரு பொதுவான காரணம் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis - கருப்பை அகப்படல புறவளர்க் கட்டி) ஆகும். இது உலகளவில் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் மகளிரில் சுமார் 10% ஐ பாதிக்கிறது. இது கருப்பையின் புறணிக்கு ஒத்த திசு கருப்பைக்கு வெளியே இனப்பெருக்க அமைப்பின் பிற பகுதிகளான ஃபலோபியன் குழாய்கள், சூலகங்கள் மற்றும் உடலின் பிற உறுப்புகளில் வளரும் ஒரு நிலையாகும். இந்த தளங்களில் வடுக்கள் இறுதியில் உருவாகின்றன அத்தோடு இவை அடைப்புகளை ஏற்படுத்தும். எண்டோமெட்ரியோசிஸ் ஆனது அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கும். சிறுமிகள் மற்றும் பெண்கள் பாடசாலைக்கும் வேலைக்கும் செல்வதைத் தடுத்தல், உறவுகளில் விரிசல் மற்றும் குறிப்பிடத்தக்க உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துதல் போன்றவை இதிலடங்கும்.
எண்டோமெட்ரியோசிஸ் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதற்கு உறுதியான பதில் எதுவும் இல்லை, ஆனால் மரபணு மற்றும் ஹோர்மோன் காரணிகள் ஒரு பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. ஃபலோபியன் குழாய்கள் வழியாக பின்னோக்கி செல்லக்கூடிய மாதவிடாய் இரத்தம், மீண்டும் பாய்ந்து இந்த இரத்தம் கருப்பைக்கு வெளியே பாடியக்கூடும் நிலையே இது என ஒரு கோட்பாடு உண்டு.
கடுமையான மாதவிடாய் வலிக்கு மேலதிகமாக, எண்டோமெட்ரியோசிஸ் பிற அறிகுறிகளுடன் இருக்கலாம்:
வலிமிகுந்த உடலுறவு
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு
மலம் கழிக்கும் போது மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வலி
மலம் கழிக்கும் போது மற்றும் சிறுநீர் கழிக்கும் போது இரத்தப்போக்கு
மாதவிடாயற்ற காலங்களிலும் கூட வயிற்று வலி
மனஉளைச்சல்
கவலை
எப்போதும் சோர்வாக உணர்தல்
குமட்டல்
வயிறு உப்புசம்
கருவுறாமை
எண்டோமெட்ரியோசிஸ் பல உடல் அறிகுறிகளை ஏற்படுத்தாது என்பதால், அதைக் கண்டறிவது சவாலானது மற்றும் சில பெண்களில் இந்நிலை 7 ஆண்டுகள் வரை கண்டறியப்படாமல் போகலாம். எனவே மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்தால் ஆரம்பத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.
இந்த நிலையை கண்டறிய சிறந்த மற்றும் ஒரே வழி சாவித்துவார அறுவை சிகிச்சை ஆகும், கேமராவைப் பயன்படுத்தி(Laparoscopy) உடலின் உட்புறத்தில் எண்டோமெட்ரியோசிஸின் திட்டுகளை நேரடியாகக் காண முடியும். எந்த இரத்த பரிசோதனைகளும் எண்டோமெட்ரியோசிஸை துல்லியமாகக் கண்டறிய முடியாது, ஆனால் புறவொலி (Ultrasound scan) எண்டோமெட்ரியோசிஸ் நோயறிதலில் ஓரளவு உதவும். இருப்பினும், ஒரு சாதாரண புறவொலி (Ultrasound scan) இல் கண்டறியப்படாவிடத்து எண்டோமெட்ரியோசிஸ் இல்லை என்று அர்த்தமல்ல.
எண்டோமெட்ரியோசிஸுக்கு தற்போது எந்த சிகிச்சையும் அல்லது அது உருவாகாமல் தடுப்பதற்கான வழியும் இல்லை, ஆனால் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும் கருவுறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் பல சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சைகள் தனிப்பட்ட அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
மருந்துகளில் வலி நிவாரணிகள் மற்றும் வீக்கத்தைக் குறைப்பவை, அத்துடன் வாய்வழி கருத்தடை மாத்திரை, கருத்தடை ஊசி, ஹோர்மோன் கருப்பையக கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை உள்வைப்புகள் போன்ற ஹோர்மோன் மருந்துகள் அடங்கும். இருப்பினும், கர்ப்பம் தரிக்க விரும்பினால், எண்டோமெட்ரியோசிஸின் திட்டுகளை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம். கருத்தரிக்க IVF (இன்விட்ரோ கருத்தரித்தல்) மற்றும் IUI (கருப்பையக கருவூட்டல்) போன்ற மேலதிக கருவுறுதல் சிகிச்சைகளும் தேவைப்படலாம்.
எண்டோமெட்ரியோசிஸின் தீவிரம் / நிலை ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது. பாதிக்கப்பட்டோரில் சுமார் 1/3 பங்கினர் காலப்போக்கில் மேம்படுகின்றனர், 1/3 பங்கினர்தொடர்ந்து முழுவதும் ஒரே மாதிரியான நிலையில் காணப்படுவதோடு, மீதமுள்ள 1/3 பங்கினரில் நிலை படிப்படியாக மோசமடையக்கூடும். ஒரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்தத்தின் பின் அறிகுறிகள் தீர்க்கப்பட்டு நிலைமை மேம்படக்கூடும். ஆனால் எண்டோமெட்ரியோசிஸ் உள்ள அனைவருக்கும் இது நடக்காது.
எனவே மாதவிடாய் வலியை தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம், மேலும் இது அன்றாட நடவடிக்கைகளுக்கு குறுக்கிட்டால், தயவுசெய்து இது குறித்து மருத்துவரிடம் பேசுங்கள்.
எழுத்தாக்கம்
ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம்