கடந்த 2024ஆம் ஆண்டானது, முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது புதிய HIV (மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்) நோயாளர்களின் ஆபத்தான அதிகரிப்பைக் கண்டது. இலங்கையில் HIV தொற்றுநோய் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. இலங்கை 1% க்கும் குறைவாகவே இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் (ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரை), 214 புதிய HIV நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அவற்றில் 28 நோயாளர்கள் 15 முதல் 24 வயதுடைய ஆண்களிடையே பதிவாகியுள்ளனர்.
HIV முக்கியமாக பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவுகிறது, ஆனால் கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவுகிறது. மேலும் அசுத்தமான IV ஊசிகளைப் பகிர்வதன் மூலமும் பரவுகிறது. இந்த வைரஸ் உடலின் நோயெதிர்ப்பு திறனை தாக்குவதோடு, சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பொதுவாக 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு எயிட்ஸ் (பெறப்பட்ட நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய்) இன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எய்ட்ஸ் உருவாகும்போது, உடலில் கடுமையான நோய்த்தொற்றுகள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது, ஏனெனில் இதில் மிகவும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளது.
HIV தற்போது குணப்படுத்தக்கூடிய தொற்று அல்ல, ஆனால் பயனுள்ள சிகிச்சை முறைகள் இருப்பதால், HIVயுடன் வாழும் நபர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். HIV தொற்றுக்குள்ளாவதற்கான அதிக ஆபத்து கொண்ட நபர்களுக்கும், வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நபர்களுக்கும் HIV தொற்றுநோயைத் தடுக்க இப்போது புதிய பயனுள்ள சிகிச்சை முறைகள் உள்ளன. வெளிப்பாட்டுக்கு முன்னான நோய்த்தடுப்பு பொதுவாக PrEP என குறிப்பிடப்படுகிறது, இது HIV இல்லாத, ஆனால் வைரஸ் தொற்றுக்குள்ளவதற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள தடுப்பு உத்தி ஆகும். இச்சிகிச்சையானது உடலுறவுக்கு முன்னும் பின்னும், தினமும் அல்லது தேவைக்கேற்ப (HIV தொற்று வெளிப்பாட்டிற்கு முன்பு) எடுக்கப்பட வேண்டும். PrEP எடுத்துக்கொள்வதற்கு முன்பு, மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதனை எவ்வாறு தொடர்தல் என்பன பற்றி நீங்கள் ஒரு மருத்துவரை ஆலோசிப்பது முக்கியம்.
வெளிப்பாட்டுக்கு பின்னரான நோய்தடுப்பு, பொதுவாக PEP என குறிப்பிடப்படுகிறது. இது HIV நோய்த்தொற்று இல்லாத ஆனால் வைரஸுக்கு சாத்தியமான வெளிப்பாடுகளை கொண்டவர்கள் தொற்றுநோயைப் பெறுவதைத் தடுக்க பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள தடுப்பு உத்தி ஆகும். HIV தொற்றுநோயைத் தடுப்பதற்காக வெளிப்பாட்டிற்குப் பின்(72 மணி நேரத்திற்குள்) சிகிச்சை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்தோடு 28 நாட்கள் வரை சிகிச்சை தொடர வேண்டும். உடலுறவின் போது ஆணுறை சேதமடைதல், வேலையின் போது ஊசி குத்தி ஏற்படும் காயங்கள், மருந்து ஊசி போட பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் பகிர்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆகியவை வெளிப்பாடுகளில் அடங்கும். சிகிச்சைக்கான மருந்துகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும், அதைத் தொடர்ந்து தேவைப்படும் HIV பரிசோதனை பற்றியும் புரிந்துகொள்ள மருத்துவருடன் ஆலோசிப்பது முக்கியம்.
PrEP மற்றும் PEP ஆகியன சரியாகவும், துல்லியமாகவும் எடுத்துக் கொண்டால் HIVயிலிருந்து பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், இச்சிகிச்சை முறைகள் பிற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளிலிருந்து(STI) பாதுகாக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஆணுறைகளைப் பயன்படுத்துவது ஏனைய பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளைப்(STI) பெறுவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரே சிறந்த வழியாகும்.
இலங்கையில் PEP மற்றும் PrEP தொடர்பில் தகவல்களை எங்கே காணலாம்:
தேசிய பாலியல் நோய்/ எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் (NSACP) – 29, டி சாரம் பிளேஸ், கொழும்பு 10. தொலைபேசி: 0112 667 163
நாடளாவிய ரீதியில் 41 பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுக்கான(STI) சிகிச்சை நிலையங்கள் உள்ளன. (அருகிலுள்ள சிகிச்சை நிலையத்தை www.know4sure.lk இணையத்தளத்தினூடாக அறியலாம்.)
PEP மற்றும் PrEP க்கான அணுகல் பற்றிய மேலதிக தகவல்களை www.know4sure.lk இணையத்தில் காணலாம்.
எழுத்தாக்கம்
இலங்கை குடும்பத்திட்ட சங்கம்