விபத்துகள் நடக்கலாம்! - அவசர கருத்தடை பற்றிய விரிவான விளக்கம்
பாதுகாப்பற்ற உடலுறவின் (UPSI) விளைவான திட்டமிடப்படாத கர்ப்பம், பாரிய உளவியல் துயரை ஏற்படுத்தும். பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் சூழ்நிலைகளில், அவசர கருத்தடைகளின் முதன்மையான பயன்பாடு திட்டமிடப்படாத கர்ப்பத்தின் வாய்ப்பை கணிசமாகக் குறைக்கும் (1 முதல் 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தினால் 98% பயனுள்ளதாக இருக்கும்). இனப்பெருக்க வயதில் உள்ள ஒரு உயிரியல் ரீதியான பெண் அவரின் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் அவசர கருத்தடைகளை வாங்கலாம் மற்றும் பயன்படுத்தலாம். அவசர கருத்தடை என்பது பாலியல் சார்ந்த ஏதேனும் எதிர்பாராத நிலைமைகளின் போது, ஏதேனும் விபத்து நடந்திருந்தால் (உ+ம், ஆணுறை சேதமடைதல்) அல்லது பாலியல் வன்கொடுமை நிலைமைகளின் போது எந்த வடிவத்திலும் கருத்தடை மேற்கொள்ளாதவர்கள் பயன்படுத்த ஒரு சிறந்த தேர்வாகும்
வாய்வழி அவசர கருத்தடை
அவசர கருத்தடை மாத்திரைகள் (லெவோனோர்ஜெஸ்ட்ரல் ஹோர்மோனைக் கொண்டவை) இலங்கையில் இம்மாத்திரைகள் 2 வடிவங்களில் கிடைக்கின்றன; Postinor 1 மற்றும் Postinor 2. அவசர கருத்தடை மாத்திரையை பாதுகாப்பற்ற உடலுறவினை (UPSI) தொடங்கிய 5 நாட்களுக்குள் (120 மணி நேரம்) எடுத்துக்கொள்ள வேண்டும். Postinor 1 இல் பாதுகாப்பற்ற உடலுறவிற்குப் பிறகு விரைவில் ஒரே ஒரு மாத்திரையை மட்டுமே எடுக்க வேண்டும். Postinor 2 இல் இரண்டு மாத்திரைகள் உள்ளன; முதலாவது மாத்திரை பாதுகாப்பற்ற உடலுறவிற்கு பிறகு விரைவில் எடுக்கப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து 2 வது மாத்திரை 12 மணி நேரம் கழித்து எடுக்கப்பட வேண்டும். இந்த மாத்திரைகள் பெரும்பாலான மருந்தகங்களில் வாங்குவதற்கு கிடைக்கின்றன, மேலும் இதற்கு மருந்துசீட்டு தேவையில்லை. இம்மாத்திரைகள் முக்கியமாக சூல் வெளியேற்றத்தை தடுப்பதன் மூலம் அல்லது தாமதப்படுத்துவதன் மூலம் செயல்படுகின்றன (சூலகங்கள் முட்டையை வெளியிடுவதிலிருந்து), ஆனால் கருக்கலைப்பை ஏற்படுத்தாது.
ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு அவசர கருத்தடைக்கும் பயன்படுத்தப்படலாம். நான்கு (4) ஹோர்மோன் மாத்திரைகள் பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு விரைவில் ஒன்றாக எடுக்கப்பட வேண்டும், பின்னர் நான்கு (4) ஹோர்மோன் மாத்திரைகள் 12 மணி நேரம் கழித்து எடுக்கப்பட வேண்டும். இந்த முறையானது சூல் வெளியேற்றம் நடைபெறுவதைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது.
வாய்வழி அவசர கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு குமட்டல் மற்றும் வாந்தி, மார்பக வலி, தலைவலி மற்றும் மாதவிடாய் இரத்தப்போக்கில் மாற்றங்கள் ஆகிய பொதுவான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். மாத்திரைகள் எடுத்துக் கொண்ட 2 மணி நேரத்திற்குள் வாந்தி ஏற்பட்டால், மாத்திரைகளை மீண்டும் எடுக்க வேண்டும்.
கருப்பையக அவசர கருத்தடை
கருப்பையக கருத்தடை சாதனம் (IUCD) அல்லது லூப் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஹோர்மோன் அல்லாத கருத்தடைக்கான பொதுவான வடிவமாகும், இது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட 5 நாட்களுக்குள் (120 மணி நேரம்) கருப்பையில் செருகப்பட்டால் அவசர கருத்தடைக்கும் பயன்படுத்தப்படலாம். IUCD மிகவும் பயனுள்ள அவசர கருத்தடை ஆகும், ஏனெனில் இது முட்டை மற்றும் விந்தணுக்களின் கருத்தரித்தலைத் தடுக்கிறது. இது கருச்சிதைவை / கருக்கலைப்பை ஏற்படுத்தாது. ஒருமுறை செருகப்பட்டால், IUCD 10 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம்.
IUCD பயனர்கள் அனுபவிக்கும் பொதுவான பக்க விளைவுகளில் லேசான வயிற்றுப் பிடிப்பு மற்றும் செருகிய பிறகு இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும். மாதவிடாய் இரத்தப்போக்கின் கால அளவிலும் அதிகரிப்பு இருக்கலாம்.
அவசர கருத்தடையானது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளிலிருந்து (STI) பாதுகாக்காது என்பதால், பாதுகாப்பற்ற உடலுறவிற்கு (UPSI) பிறகு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கவலை இருந்தால் மருத்துவரிடம் பேச பரிந்துரைக்கப்படுகிறது. அவசர கருத்தடை முறையானது நிரந்தரமானது அல்ல மற்றும் பயனரின் எதிர்கால கருவுறுதலை அது பாதிக்காது. பல ஆண்டுகளாக, அதிகரித்த அணுகல், மலிவு மற்றும் பயனர்களுக்கு இலகுவான அணுகுமுறை காரணமாக அவசர கருத்தடை தெரிவுகள் பிரபலமடைந்துள்ளன. இருப்பினும், அவசர கருத்தடை மாத்திரைகள் அவசரகால சூழ்நிலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், வழக்கமான கருத்தடையாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
எழுத்தாக்கம்
ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம்