உங்கள் பாலியல் சுகாதாரத்தை பரிசோதித்தல்! | The Family Planning Association of Sri Lanka

உங்கள் பாலியல் சுகாதாரத்தை பரிசோதித்தல்!

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் கணிசமான அளவில் சுகாதார அபாயத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் இது அனைத்து பால், வயது மற்றும் பாலினத்தவர்களையும் பாதிக்கலாம்.

 

பாலியல் ரீதியாக ஈடுபாட்டில் இருக்கும் அனைத்து நபர்களும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு வழக்கமான பரிசோதனைகளை செய்வதன் மூலம் ஆரோக்கியமான பாலியல் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும். ஏனையோரின் கருத்துக்கள் பற்றிய பயம், தடைகள் மற்றும் பாலியல் சுகாதாரத்தைச் சுற்றியுள்ள களங்கம் காரணமாக பெரும்பாலான மக்கள் இச்சோதனையை எதிர்க்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். எவ்வாறாயினும், ஒரு நபர் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டால், பலருடன் உடலுறவு கொண்டிருந்தால் அல்லது ஏதேனும் அசாதாரண அறிகுறிகளை அனுபவித்தால் (கீழே விவரிக்கப்பட்டுள்ளது) தவறாமல் பரிசோதனை செய்வது முக்கியம். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அனைவருக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதால், ஒரு துணையுடன் மாத்திரம் உடலுறவில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது பாலியல் உறவில் ஈடுபடும் துணைகளின் எண்ணிக்கையையோ பொருட்படுத்தாமல் அனைவரும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

 

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் சிகிச்சையை ஆரம்பத்திலேயே தொடங்கவும், நோய் அறிகுறிகளைக் குறைக்கவும் கருவுறாமை போன்ற சிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது. பெரும்பாலான நோய்த்தொற்றுகளை ஒரு எளிய மருந்து மூலம் குணப்படுத்த முடியும். இருப்பினும், HIV (மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்) மற்றும் HSV (ஹெர்பெஸ்) போன்ற சில வைரஸ் நிலைமைகளை குணப்படுத்த முடியாது, ஆனால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பயனுள்ள சிகிச்சை கிடைக்கிறது.

 

இலங்கையில் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சையானது இப்போது எளிமையானது, மலிவானது மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பல சமீபத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

 

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் பிறப்புறுப்பில் இருந்தான பிறப்புறுப்பு தொடர்பு, வாய்வழி உடலுறவு , யோனிவழி உடலுறவு மற்றும் குதவழி உடலுறவு மற்றும் குறிப்பாக உடலுறவு பாதுகாப்பற்றதாக இருக்கும்போது எளிதில் பரவுகிறது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான நபர்கள் அறிகுறியற்றவர்களாக காணப்படுகின்றனர். மேலும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலும் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை, எனவே மற்றவர்களுக்கு தொற்றுநோயைத் தொடர்ந்து பரப்பலாம்.

 

 

அறிகுறிகள் இருந்தால், அவை பின்வருமாறு இருக்கலாம்:

 

  1. யோனி அல்லது ஆண்குறி வெளியேற்றம் - நிறம், வாசனை மற்றும் அளவு உட்பட அனைத்திலும்  மாற்றம் 
  2. சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு அல்லது வலி
  3. பிறப்புறுப்பு (வெளிப்புற பெண் பிறப்புறுப்பு) அல்லது ஆண்குறி அரிப்பு
  4. உடலுறவு கொள்ளும்போது வலி
  5. பிறப்புறுப்பு பகுதி, ஆசனவாய் அல்லது வாயில் உள்ள தோலில் காயங்கள்
  6. வயிற்று வலி
  7. விபரிக்க முடியாத காய்ச்சல்

 

 

பிறப்புறுப்புகளில் அரிப்பு அல்லது சிறுநீர் கழிக்கும்போது வலி போன்ற சில அறிகுறிகள், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு மாத்திரமான அறிகுறி மட்டுமல்ல; பிறப்புறுப்பில் உள்ள புண் அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்று போன்ற பிற நிலைமைகளின் காரணமாகவும் இருக்கலாம்.

 

ஆணுறைகளின் பயன்பாடு (பாதுகாப்பான உடலுறவு) பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கிறது.

 

 

எதற்காக நாம் பரிசோதனை செய்ய வேண்டும்

 

 

பரிசோதனை செய்வதற்கு முன் ஒரு வைத்தியர் / சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம், இதனால் சரியான சோதனைகள் கோரப்படலாம். சுகாதார நிபுணர் முதலில் ஒரு நபரின் பாலியல் வரலாறு தொடர்பான கேள்விகளைக் கேட்பார், மேலும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளை அந்த நபரிடம் பரிசோதிக்கலாம்.

 

 

 

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று பரிசோதனையில் இரத்த மாதிரி, சிறுநீர் மாதிரி, வாய்வழி/ யோனி/ குதவழி அல்லது ஆண்குறி துடைப்பானின் மாதிரியை எடுத்துக்கொள்வதை உள்ளடக்கியிருக்கலாம். இந்த சோதனைகள் வலிமிகுந்தவையல்ல. மேலும் இம்மாதிரிகள் விரைவாக எடுக்கப்படுகின்றன.

 

 

 

 

 

எங்கே பரிசோதனை செய்யவது 

 

  • பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை அணுகுவதற்கு பல இடங்கள் உள்ளன, இதில் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனையும் அடங்கும். அவையாவன:

 

  • தேசிய STD/AIDS கட்டுப்பாடு திட்டம் மற்றும் 40க்கு மேற்பட்ட அரச சிகிச்சை நிலையங்கள் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பாலியல் சுகாதார சேவைகளை இலவசமாக வழங்குவதை நாடு முழுவதும் காணலாம்.

 

  • ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கத்தின் 8 சிகிச்சை நிலையங்கள் பாலியல் சுகாதார சேவைகளை இலவசமாக அல்லது அனைவராலும் அணுகக்கூடிய விலையில் உதவியை வழங்குகிறது.

 

மேலும் இப்பரிசோதனைச் சேவைகளை பணம் செலுத்துவடஹ்ன் மூலம் தனியார் சுகாதாரத் துறையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

 

வயது, பால் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறந்த மனதுடன், தனிப்பட்ட மற்றும் ரகசிய சேவைகளை வழங்க மேற்கண்ட துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, பரிசோதனை செய்துகொள்ளுங்கள்!

 

எழுத்தாக்கம் 

ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம்

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By