பாலியல்/ உடலுறவின் விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், மாதவிடாய் நிறுத்தத்தின்போது குறைவாகப் பேசப்படும் அம்சங்களில் ஒன்றாகும். பாலியல் விருப்பம் என்பது ஹோர்மோன்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. உடல் ரீதியான சௌகரியம், தூக்கம், மன அழுத்தம், உணர்ச்சி நலன், மருந்துகள் மற்றும் உறவுகள் ஆகிய அனைத்தும் பாலியல் விருப்பத்தைப் பாதிக்கலாம்.
1. மாதவிடாய் நிறுத்தத்தால் பாலியல் விருப்பம் குறையுமா?
ஆம். மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தில் (Perimenopause) அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு சிலருக்கு பாலியல் விருப்பம் குறையலாம்.
ஹோர்மோன் மாற்றங்கள் இதில் ஒரு பங்கு வகிக்கலாம். இருப்பினும், பாலியல் விருப்பம் என்பது பல காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான விடயமாகும். பாலியல் விருப்பத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு ஹோர்மோன்கள் மட்டுமே காரணம் என்று கருத முடியாது.
2. ஹோர்மோன்கள் பாலியல் விருப்பத்தை எவ்வாறு பாதிக்கின்றன?
ஈஸ்ட்ரஜன் அளவு குறைவதால், யோனியில் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியின் திசுக்கள் பாதிக்கப்படலாம். அதேவேளை, ஹோர்மோன் மாற்றங்கள் பாலியல் தூண்டுதலுக்கான உடலின் எதிர்வினையையும் பாதிக்கலாம்.
இருப்பினும், உளவியல், சமூக மற்றும் உறவுகள் சார்ந்த காரணிகளும் பாலியல் விருப்பத்தைப் பாதிக்கின்றன. மன அழுத்தம், சோர்வு, போதிய தூக்கமின்மை, பதற்றம், மனச்சோர்வு, மருந்துகள் மற்றும் உடல் ரீதியான அசௌகரியம் ஆகிய அனைத்தும் இதற்குப் பங்களிக்கலாம்.
3. யோனி வறட்சி பாலியல் விருப்பத்தைப் பாதிக்குமா?
ஆம். உடலுறவின்போது யோனியில் வறட்சி ஏற்படுவதாலோ, அசௌகரியம் அல்லது வலி ஏற்படுவதாலோ உடலுறவில் ஈடுபடுவதற்கான ஆர்வம் குறைவது இயல்பானதாகும்.
எனவே, யோனி வறட்சி மற்றும் வலியைக் கையாள்வது, பாலியல் நலனை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கலாம்.
4. மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு பாலியல் விருப்பம் குறைவது இயல்பற்றதா?
இல்லை. பாலியல் விருப்பத்தின் ஒரே ஒரு “இயல்பான” அளவு என்று எதுவும் இல்லை.
இந்த மாற்றம் உங்களுக்கு விருப்பமற்றதாக இருக்கிறதா, மன உளைச்சலை ஏற்படுத்துகிறதா அல்லது உங்கள் உறவு அல்லது வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கிறதா என்பதே முக்கியம். அவ்வாறு பாதித்தால், அதை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சாத்தியமான காரணங்களைக் கண்டறிய சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் உங்களுக்கு உதவ முடியும்.
5. மன அழுத்தமும் தூக்கமின்மையும் பாலியல் விருப்பத்தைப் பாதிக்குமா?
நிச்சயமாக. மன அழுத்தமும் கடுமையான சோர்வும் உடலுறவில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை கணிசமாகக் குறைக்கலாம். மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் இரவு வியர்வை மற்றும் தூக்கத் தடைகள் சோர்வை மேலும் அதிகரிக்கலாம்.
எனவே, தூக்கத்தை மேம்படுத்துவதும் மன அழுத்தத்தைக் கையாள்வதும் பாலியல் நலனை மேம்படுத்துவதில் முக்கியமான பகுதிகளாக இருக்கலாம்.
6. மருந்துகள் பாலியல் விருப்பத்தைப் பாதிக்குமா?
ஆம். சில மருந்துகள் பாலியல் விருப்பத்தையோ அல்லது பாலியல் தூண்டுதலுக்கான உடலின் எதிர்வினையையோ பாதிக்கலாம்.
மருந்தொன்றைத் தொடங்கிய பிறகு பாலியல் விருப்பத்தில் மாற்றத்தைக் கவனித்தால், உங்கள் சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாடுங்கள். மருத்துவ ஆலோசனையின்றி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நிறுத்த வேண்டாம்.
7. குறைந்த பாலியல் விருப்பம் என்னை பாதிக்குமாயின் என்ன செய்யலாம்?
முதலில், இந்த மாற்றத்திற்குப் பங்களிக்கக்கூடிய காரணிகளைக் கண்டறிவதே முக்கியமாகும். இதற்காக யோனி வறட்சி அல்லது வலி, தூக்கம், மன அழுத்தம், மனநிலை மாற்றங்கள், மருந்துகள், உறவுகள் சார்ந்த காரணிகள் மற்றும் ஹோர்மோன் மாற்றங்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கலாம்.
காரணத்தைப் பொறுத்து, சிகிச்சை அல்லது ஆலோசனை உதவக்கூடும். மிகவும் பொருத்தமான அணுகுமுறையைத் தீர்மானிக்க சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் உங்களுக்கு உதவ முடியும்.
8. எப்போது சுகாதார நிபுணரொருவருடனான தொழில்முறை உதவியை நாட வேண்டும்?
பாலியல் விருப்பத்தில் நீடித்த மாற்றம் மன உளைச்சலை ஏற்படுத்தினாலோ அல்லது உங்கள் உறவு அல்லது வாழ்க்கைத் தரத்தைப் பாதித்தாலோ, சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
பாலியல் ஆரோக்கியமும் சுகாதாரப் பராமரிப்பின் ஒரு பகுதியாகும். உதவி கேட்பதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.
இரகசியமான ஆதரவைப் பெற, Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
FPA Sri Lanka பற்றி
இலங்கையின் குடும்பத் திட்டமிடல் சங்கம் (Family Planning Association of Sri Lanka – FPA Sri Lanka), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான தகவல்களையும் சேவைகளையும் வழங்குகிறது. Bloom by FPA Sri Lanka ஊடாக, மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, பல்வேறு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தகவல் மற்றும் இரகசியமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இரகசியமான ஆதரவு தேவையா?: Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
மருத்துவத் தகவல்: இந்தக் கட்டுரை பொதுவான சுகாதாரத் தகவல்களை வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இது தகுதிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் நேரடியாகப் பெறப்படும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளும் அதற்கான சிகிச்சைத் தெரிவுகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.