மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலம் (Perimenopause): அறிகுறிகள், மாற்றங்கள் மற்றும் எதிர்பார்க்க வேண்டியவை | The Family Planning Association of Sri Lanka

மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலம் (Perimenopause): அறிகுறிகள், மாற்றங்கள் மற்றும் எதிர்பார்க்க வேண்டியவை

மாதவிடாய் நிறுத்தம் திடீரென நிகழ்வதில்லை. மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய ஆண்டுகள், பெரிமெனோபோஸ் (Perimenopause) என அழைக்கப்படுகின்றன. இந்த மாற்றக் காலத்தில் மாதவிடாய், தூக்கம், மனநிலை, பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம்.

மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தைப் புரிந்துகொள்வது, உடலில் என்ன நிகழ்கிறது என்பதை அடையாளம் காணவும், எதிர்பார்க்கக்கூடிய மாற்றங்களையும் மருத்துவக் கவனம் தேவைப்படக்கூடிய அறிகுறிகளையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்ளவும் உதவும்.

1. மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலம்(பெரிமெனோபோஸ்) என்றால் என்ன?

பெரிமெனோபோஸ் காலம் என்பது மாதவிடாய் நிறுத்தத்தை நோக்கிச் செல்லும் மாற்றக் காலமாகும். இந்தக் காலத்தில் கருப்பைகளின் ஹோர்மோன் உற்பத்தி குறைவான அல்லது சீரான தன்மையைக் கொண்டதாக மாறுகிறது. ஈஸ்ட்ரஜன் போன்ற ஹோர்மோன்களின் அளவுகளும் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகலாம்.

மாதவிடாய் நிற்காத நிலையிலும், மாதவிடாய் சுழற்சி பெரும்பாலும் ஒழுங்கற்றதாக மாறுவதுடன், மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய அறிகுறிகளும் தோன்றத் தொடங்கலாம்.

2. பெரிமெனோபோஸ் எப்போது தொடங்கலாம்?

பெரிமெனோபோஸ், மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கலாம். இது பொதுவாக 40 வயதுகளில் ஏற்படுகிறது. இருப்பினும், இதற்கு முன்னரோ பின்னரோ தொடங்கலாம்.

இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதால், ஒருவர் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தை அனுபவிக்கிறாரா என்பதை வயதை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது.

3. பெரிமெனோபோஸ் காலத்தில் மாதவிடாய் எவ்வாறு மாறும்?

மாதவிடாய் கணிக்க முடியாத வகையில் மாறலாம். மாதவிடாய் குறுகிய அல்லது நீண்ட இடைவெளிகளில் ஏற்படலாம். இரத்தப்போக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். மாதவிடாய் நீடிக்கும் காலமும் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்.

இத்தகைய மாற்றங்கள் பொதுவானவையாக இருந்தாலும், வழக்கத்திற்கு மாறாக அதிகமான இரத்தப்போக்கு, நீண்டகால இரத்தப்போக்கு அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் ஏற்படும் இரத்தப்போக்கு குறித்து சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாட வேண்டும்.

4. பெரிமெனோபோஸ் காலத்தில் வேறு என்ன அறிகுறிகள் ஏற்படலாம்?

உடலில் திடீரென ஏற்படும் வெப்ப அலைகள் (Hot flushes), இரவில் அதிகமாக வியர்த்தல், தூக்கப் பிரச்சினைகள், சோர்வு, மனநிலை மாற்றங்கள், கவனம் செலுத்துவதில் சிரமம், தலைவலி, யோனி வறட்சி மற்றும் பாலியல் விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை ஏற்படக்கூடிய அறிகுறிகளில் அடங்கும்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் ஏற்படுவதில்லை. மேலும், அவற்றின் தீவிரம் காலப்போக்கில் மாறக்கூடும்.

5. பெரிமெனோபோஸ் காலத்தில் கர்ப்பம் தரிக்க முடியுமா?

ஆம். மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தாலும், மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தில் சூல் வெளியேற்றம் (Ovulation) தொடர்ந்து நிகழக்கூடும்.

கர்ப்பம் தரிப்பது விருப்பமில்லையெனில், மாதவிடாய் நிறுத்தம் உறுதிப்படுத்தப்படும் வரை கருத்தடை முறைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது அவசியமாகும். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் பொருத்தமான கருத்தடைத் தெரிவுகள் குறித்து சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் ஆலோசனை வழங்க முடியும்.

6. பெரிமெனோபோஸ் காலம் பாலியல் விருப்பத்தைப் பாதிக்குமா?

பாதிக்கலாம். ஹோர்மோன் மாற்றங்கள் பாலியல் விருப்பத்தைப் பாதிக்கலாம். இருப்பினும், பாலியல் விருப்பமானது தூக்கம், மன அழுத்தம், மனநிலை மாற்றங்கள், மருந்துகள், உறவுகள் மற்றும் உடல் ரீதியான சௌகரியம் ஆகியவற்றாலும் பாதிக்கப்படுகிறது.

யோனி வறட்சி அல்லது வலியுடன் கூடிய உடலுறவு காரணமாக ஒருவர் பாலியல் செயல்பாடுகளைத் தவிர்க்கலாம். இதுவும் பாலியல் விருப்பத்தை மேலும் பாதிக்கக்கூடும்.

7. பெரிமெனோபோஸ் எவ்வளவு காலம் நீடிக்கும்?

இதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு இல்லை. பெரிமெனோபோஸ் காலம் பல ஆண்டுகள் நீடிக்கலாம். இந்த மாற்றக் காலம் முழுவதும் அறிகுறிகள் மாறக்கூடும்.

வேறு காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில், தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்த பிறகே மாதவிடாய் நிறுத்தம் உறுதிப்படுத்தப்படுகிறது.

8. நான் எப்பொழுது ஒரு சுகாதாரப் பராமரிப்பு நிபுணரை அணுக வேண்டுமா?

மாதவிடாய் மாற்றங்கள் அல்லது பிற அறிகுறிகள் குறித்து உங்களுக்குக் கவலை இருந்தால், அவை பெரிமெனோபோஸ் காலத்துடன் தொடர்புடையவையா அல்லது வேறு ஏதேனும் உடல்நிலையால் ஏற்படுகின்றனவா என்பதைத் தீர்மானிக்க, சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாடுவது உதவும்.

இரகசியத்தன்மையுடனான ஆதரவைப் பெற, Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

FPA Sri Lanka பற்றி

இலங்கையின் குடும்பத் திட்டமிடல் சங்கம் (Family Planning Association of Sri Lanka – FPA Sri Lanka), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான தகவல்களையும் சேவைகளையும் வழங்குகிறது. Bloom by FPA Sri Lanka ஊடாக, மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, பல்வேறு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தகவல் மற்றும் இரகசியமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இரகசியமான ஆதரவு தேவையா?: Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

மருத்துவத் தகவல்: இந்தக் கட்டுரை பொதுவான சுகாதாரத் தகவல்களை வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இது தகுதிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் நேரடியாகப் பெறப்படும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளும் அதற்கான சிகிச்சைத் தெரிவுகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By