மாதவிடாய் நிறுத்தத்திற்கான ஹோர்மோன் மாற்று சிகிச்சை (HRT) பாதுகாப்பானதா? | The Family Planning Association of Sri Lanka

மாதவிடாய் நிறுத்தத்திற்கான ஹோர்மோன் மாற்று சிகிச்சை (HRT) பாதுகாப்பானதா?

மாதவிடாய் நிறுத்த காலத்தில் (Menopause) ஏற்படும் தொந்தரவான அறிகுறிகளைப் போக்க, சிலருக்கு ஹோர்மோன் மாற்று சிகிச்சை (Hormone Replacement Therapy – HRT) ஒரு பயனுள்ள சிகிச்சை முறையாக இருக்கலாம். இருப்பினும், இந்த சிகிச்சை அனைவருக்கும் பொருத்தமானது என்று கூற முடியாது. HRT-யின் பல்வேறு வகைகள், அவற்றின் சாத்தியமான நன்மைகள் மற்றும் அபாயங்களைப் புரிந்துகொள்வது மற்றும் சுகாதார பராமரிப்பு நிபுணருடன் தெளிவான கலந்துரையாடலை மேற்கொள்வது அவசியமானதாகும்.

1. HRT என்றால் என்ன?

மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் உடலில் குறைவாகச் சுரக்கத் தொடங்கும் ஹோர்மோன்களை, குறிப்பாக ஈஸ்ட்ரஜன் (Oestrogen) மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகியவற்றை ஈடுசெய்வதற்காக வழங்கப்படும் சிகிச்சையே ஹோர்மோன் மாற்று சிகிச்சை (HRT) ஆகும்.

மாத்திரைகள், தோலில் ஒட்டும் மருந்துத் தகடுகள் (Patches), ஜெல்கள் மற்றும் பிற தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இந்தச் சிகிச்சையைப் பெறலாம்.

2. HRT எந்த அறிகுறிகளைப் போக்க உதவும்?

உடல் முழுவதும் செயல்படும் ஹோர்மோன் மாற்று சிகிச்சை (Systemic HRT), குறிப்பாக உடலில் திடீரென ஏற்படும் வெப்ப அலைகள் (Hot flushes) மற்றும் இரவில் அதிகமாக வியர்த்தல் (Night sweats) போன்ற அறிகுறிகளைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய ஏனைய அறிகுறிகளையும் கட்டுப்படுத்த உதவும்.

யோனியில் வறட்சி அல்லது அசௌகரியம் போன்ற அறிகுறிகள் முக்கியப் பிரச்சினையாக இருக்கும்போது, உடல் முழுவதும் செய்யப்படும் HRTயை விட, யோனிப் பகுதியில் நேரடியாகச் செய்யப்படும் சிகிச்சைகள் (Local vaginal treatments) மிகவும் பொருத்தமானவையாக இருக்கலாம்.

3. மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் அனைவருக்கும் HRT தேவையா?

இல்லை. சிலருக்கு மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் மிகக் குறைவான அறிகுறிகளே ஏற்படலாம். அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், வேறு சிலருக்கு அன்றாட வாழ்க்கைத்தரத்தைப் பாதிக்கும் அளவுக்கு கடுமையான அறிகுறிகள் ஏற்படலாம்.

HRT என்பது கிடைக்கக்கூடிய பல சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். இந்தச் சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதா, இல்லையா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

4. HRT பாதுகாப்பானதா?

இதற்கு எளிமையாக “ஆம்” அல்லது “இல்லை” என்று பதிலளிக்க முடியாது.

HRTயின் சாத்தியமான நன்மைகள் மற்றும் அபாயங்கள் பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். அவற்றில் வயது, பயன்படுத்தப்படும் HRT வகை, மருந்தின் அளவு, மருந்து உடலுக்குள் செலுத்தப்படும் அல்லது உறிஞ்சப்படும் முறை, சிகிச்சையின் கால அளவு மற்றும் தனிப்பட்ட, குடும்ப மருத்துவ வரலாறு ஆகியவை அடங்கும்.

உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலையில் இந்தச் சிகிச்சையின் நன்மைகள் அதன் அபாயங்களை விட அதிகமாக இருக்குமா என்பதைப் புரிந்துகொள்ள, சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் உங்களுக்கு உதவ முடியும்.

5. சிலருக்கு ஈஸ்ட்ரஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய இரண்டும் ஏன் தேவைப்படுகின்றன?

கருப்பை (Uterus) உள்ளவர்கள் உடல் முழுவதும் செயல்படும் ஈஸ்ட்ரஜனை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது, அது கருப்பையின் உட்புறப் படலத்தின் வளர்ச்சியைத் தூண்டி, கருப்பையின் உட்புறப் படலப் புற்றுநோய் (Endometrial cancer) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

எனவே, கருப்பையின் உட்புறப் படலத்தைப் பாதுகாப்பதற்காக, ஈஸ்ட்ரஜனுடன் பொதுவாக புரோஜெஸ்ட்டிரோனும் தேவைப்படுகிறது. கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை (Hysterectomy) செய்துகொண்டவர்களுக்கு, அவர்களின் நிலைமைக்கு ஏற்ப வேறுபட்ட சிகிச்சைத் தேவைகள் இருக்கலாம்.

6. Systemic HRT மற்றும் Local HRT ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன?

Systemic HRT: இந்தச் சிகிச்சை ஹோர்மோன்களை இரத்த ஓட்டத்திற்குள் செலுத்தி, உடல் முழுவதும் செயல்படச் செய்கிறது. உடலில் திடீரென ஏற்படும் வெப்ப அலைகள் போன்ற பரவலான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

Local HRT: இந்தச் சிகிச்சையில் குறைந்த அளவிலான ஈஸ்ட்ரஜன் நேரடியாக யோனித் திசுக்களில் செயல்படுமாறு வழங்கப்படுகிறது. இது முக்கியமாக யோனி மற்றும் சில சிறுநீர் தொடர்பான அறிகுறிகளைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது.

உங்களுக்கு மிகவும் பொருத்தமான சிகிச்சை, உங்களிடம் காணப்படும் அறிகுறிகள் மற்றும் தனிப்பட்ட உடல்நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டும்.

7. யோனி வறட்சி மற்றும் உடலுறவின்போது ஏற்படும் வலியைப் போக்க HRT உதவுமா?

மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய சில யோனி அறிகுறிகளை ஹோர்மோன் சிகிச்சைகள் குறைக்க உதவலாம்.

மாதவிடாய் நிறுத்தத்தால் ஏற்படும் யோனி வறட்சி மற்றும் உடலுறவின்போது ஏற்படும் வலிக்கு, சம்பந்தப்பட்ட நபரின் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து, சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் யோனி ஈஸ்ட்ரஜன் சிகிச்சையையோ அல்லது வேறு சிகிச்சையையோ பரிந்துரைக்கலாம்.

8. சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் ஆலோசனை பெறாமல் HRT-யைத் தொடங்கலாமா?

இல்லை. HRT சிகிச்சை ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும்.

தகுதிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணர், உங்களுடைய அறிகுறிகள், மருத்துவ வரலாறு, தற்போது பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் தனிப்பட்ட அபாயக் காரணிகளை மதிப்பீடு செய்து, உங்களுக்குக் கிடைக்கக்கூடிய சிகிச்சைத் தெரிவுகள் குறித்து ஆலோசனை வழங்க முடியும்.

நீங்கள் HRT சிகிச்சை உங்களுக்குப் பொருத்தமானதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களாயின் இரகசியமான ஆதரவைப் பெற, Bloom by FPA Sri Lanka அமைப்பை
077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

FPA Sri Lanka பற்றி

இலங்கையின் குடும்பத் திட்டமிடல் சங்கம் (Family Planning Association of Sri Lanka – FPA Sri Lanka), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான தகவல்களையும் சேவைகளையும் வழங்குகிறது. Bloom by FPA Sri Lanka ஊடாக, மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, பல்வேறு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தகவல் மற்றும் இரகசியமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இரகசியமான ஆதரவு தேவையா?: Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

மருத்துவத் தகவல்: இந்தக் கட்டுரை பொதுவான சுகாதாரத் தகவல்களை வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இது தகுதிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் நேரடியாகப் பெறப்படும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளும் அதற்கான சிகிச்சைத் தெரிவுகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By