மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் யோனி வறட்சி: காரணங்களும் சிகிச்சைகளும் | The Family Planning Association of Sri Lanka

மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் யோனி வறட்சி: காரணங்களும் சிகிச்சைகளும்

மாதவிடாய் நிறுத்தக் காலத்திலும் அதற்குப் பிறகும் யோனி வறட்சி என்பது

1. மாதவிடாய் நிறுத்தத்தின்போது யோனி வறட்சி ஏன் ஏற்படுகிறது?

ஈஸ்ட்ரஜன் அளவு குறையும்போது, யோனித் திசுக்கள் மெல்லியதாகவும், நெகிழ்வுத்தன்மை குறைந்ததாகவும், இயற்கையான ஈரப்பதம் குறைந்ததாகவும் மாறலாம்.

இந்த மாற்றங்கள் யோனியின் திறப்பைச் சுற்றியுள்ள திசுக்களையும் சிறுநீர் மண்டலத்தையும் பாதிக்கலாம். இந்த மாற்றங்களுடன் தொடர்புடைய அறிகுறிகளின் தொகுப்பு சில சமயங்களில் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய மரபணு-சிறுநீரகப் பாதை நோய்க்குறி (Genitourinary Syndrome of Menopause – GSM) என அழைக்கப்படுகிறது.

2. யோனி வறட்சி எவ்வாறு உணரப்படும்?

அறிகுறிகளில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, உறுத்தல் அல்லது புண் போன்ற வலி ஆகியவை அடங்கலாம்.

சிலர் பாலியல் செயல்பாடுகளின்போது அசௌகரியம், அதிக உணர்திறன் அல்லது அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு அல்லது மீண்டும் மீண்டும் சிறுநீர்ப் பாதைத் தொற்றுகள் ஏற்படுதல் போன்ற சிறுநீர் தொடர்பான அறிகுறிகளையும் அனுபவிக்கலாம்.

3. யோனி வறட்சி உடலுறவைப் பாதிக்குமா?

ஆம். இயற்கையான ஈரப்பதம் குறைவதால், உடலுறவின்போது ஊடுருவும் செயல்பாட்டில் உராய்வு அதிகரித்து, அசௌகரியம் அல்லது வலி ஏற்படலாம்.

வலி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் பாலியல் தூண்டுதல் மற்றும் விருப்பத்தைப் பாதிக்கலாம். இதனால் உடல் ரீதியான அசௌகரியம் உணர்ச்சி மற்றும் பாலியல் நல்வாழ்வைப் பாதிக்கத் தொடங்கும் ஒரு சுழற்சி உருவாகலாம்.

4. மசகு திரவத்திற்கும் யோனி ஈரப்பதமாக்கும் பதார்த்தங்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

மசகு திரவம் (Lubricant) பொதுவாக பாலியல் செயல்பாடுகளின்போது உராய்வைக் குறைத்து, சௌகரியத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

யோனி ஈரப்பதமாக்கும் பதார்த்தங்கள் (Vaginal moisturiser) தொடர்ந்து பயன்படுத்தப்படுவதன் மூலம் நீடித்த யோனி வறட்சியைப் போக்க உதவுகிறது. இவை வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது கடுமையாக இருந்தாலோ, மருத்துவ மதிப்பீட்டிற்கு மாற்றாக இவற்றில் எதையும் பயன்படுத்தக்கூடாது.

5. யோனி வறட்சிக்கு மசகு திரவங்கள் உதவுமா?

ஆம். மசகு திரவங்கள் உராய்வைக் குறைத்து, பாலியல் செயல்பாடுகளை மிகவும் சௌகரியமானதாக மாற்ற உதவலாம்.

இருப்பினும், வறட்சி தொடர்ந்து நீடித்தால், மசகு திரவத்தை மட்டும் பயன்படுத்துவது யோனித் திசுக்களில் ஏற்படும் அடிப்படை மாற்றங்களைச் சரிசெய்யாமல் இருக்கலாம். கூடுதல் சிகிச்சைத் தெரிவுகள் குறித்து சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாடலாம்.

6. ஈஸ்ட்ரஜன் சிகிச்சை மூலம் யோனி வறட்சிக்குச் சிகிச்சையளிக்க முடியுமா?

சிலருக்கு, குறைந்த அளவிலான யோனி ஈஸ்ட்ரஜன் சிகிச்சை யோனி வறட்சியையும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளையும் மேம்படுத்தலாம்.

இந்தச் சிகிச்சை முதன்மையாக யோனித் திசுக்களில் செயல்படுகிறது. இது உடல் முழுவதும் செயல்படும் ஹோர்மோன் மாற்று சிகிச்சையிலிருந்து (Systemic HRT) வேறுபட்டது. இந்தச் சிகிச்சை உங்களுக்குப் பொருத்தமானதா என்பது உங்கள் தனிப்பட்ட உடல்நிலையைப் பொறுத்தது. இதுகுறித்து சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாட வேண்டும்.

7. யோனி வறட்சி தானாகவே மறைந்துவிடுமா?

நிச்சயமாக கூற முடியாது. மாதவிடாய் நிறுத்தத்தின் சில அறிகுறிகள் காலப்போக்கில் மேம்படலாம். இருப்பினும், ஈஸ்ட்ரஜன் அளவு குறைவதுடன் தொடர்புடைய யோனி மற்றும் சிறுநீர் அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கலாம்.

வறட்சி உங்கள் சௌகரியம், உறவுகள் அல்லது பாலியல் நல்வாழ்வைப் பாதித்தால், அதனுடன் வாழ வேண்டியதுதான் என்று கருதாமல், சிகிச்சைத் தெரிவுகள் குறித்து கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும்.

8. நான் எப்போது மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்?

வறட்சி தொடர்ந்து நீடித்தாலோ, வலியை ஏற்படுத்தினாலோ, இரத்தப்போக்கு, வழக்கத்திற்கு மாறான வெளியேற்றம், எரிச்சல் அல்லது சிறுநீர் தொடர்பான அறிகுறிகளுடன் காணப்பட்டாலோ அல்லது உங்கள் பாலியல் நல்வாழ்வைப் பாதித்தாலோ, சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாடுங்கள்.

இரகசியத்தன்மையுடனான ஆதரவைப் பெற, Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

FPA Sri Lanka பற்றி

இலங்கையின் குடும்பத் திட்டமிடல் சங்கம் (Family Planning Association of Sri Lanka – FPA Sri Lanka), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான தகவல்களையும் சேவைகளையும் வழங்குகிறது. Bloom by FPA Sri Lanka ஊடாக, மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, பல்வேறு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தகவல் மற்றும் இரகசியமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இரகசியமான ஆதரவு தேவையா?: Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

மருத்துவத் தகவல்: இந்தக் கட்டுரை பொதுவான சுகாதாரத் தகவல்களை வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இது தகுதிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் நேரடியாகப் பெறப்படும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளும் அதற்கான சிகிச்சைத் தெரிவுகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By