மாதவிடாய் சுகாதார பொருட்கள் தொடர்பில் உங்கள் விருப்பத்தேர்வுகளை அறிந்து கொள்ளுங்கள்!
மாதவிடாயை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் தமக்கென சிறந்த மாதவிடாய் சுகாதாரப் பொருளை அது கிடைக்கும் தன்மை, விலை, அணுகல், பயன்பாட்டு முறை மற்றும் சுற்றுச்சூழலுக்கான நிலைத்தன்மை போன்ற காரணிகளை கவனத்தில்கொண்டு தேர்ந்தெடுக்க உரிமையுண்டு. மாதவிடாய் சுகாதாரம் குறித்து நன்கு அறியப்பட்ட முடிவு எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த, பல்வேறு வகையான மாதவிடாய் சுகாதார பொருட்களைப் புரிந்துகொள்வது முக்கியம். இலங்கையில் கிடைக்கும் மாதவிடாய் சுகாதார பொருட்களில் சுகாதார அணையாடைகள்/pads (ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மற்றும் மீள்பாவனைக்குரியவை), டேம்போன்கள்(பஞ்சுத்தக்கை), மாதவிடாய் கோப்பைகள்(menstrual cups), Menstrual Disc மற்றும் மாதவிடாய் உள்ளாடைகள்(menstrual underwear) ஆகியவை அடங்கும்.
சுகாதார அணையாடைகள்
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய சுகாதார அணையாடைகள் இலங்கையில் கிடைக்கும் பொதுவான மாதவிடாய் சுகாதார தயாரிப்பு ஆகும். மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் எளிதாகப் பெறலாம். அவை பொதுவாக ரேயான், பிளாஸ்டிக் மற்றும் பருத்தி போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன. உள்ளாடைகளில் ஒட்டுவதற்கும் கசிவுகளைத் தடுப்பதற்கும் இதன் கீழ்ப்பகுதில் ஒட்டுவதற்கான படலம் உள்ளது. சில அணையாடைகளில் இப்படலத்திற்கு மேலதிகமாக, மேலும் பாதுகாக்க இருபுறமும் "இறக்கைகள்" போன்ற ஒட்டும் பகுதிகள் உள்ளன. மீள்பயன்பாட்டிற்கான அணையாடைகள் பருத்தியால் செய்யப்பட்டவை மற்றும் இவை பொதுவாக உள்ளாடைகளுக்கு கசிவைப் பாதுகாக்க உதவும் ஒரு பிடியுடன் கூடிய இறக்கைகள் போன்ற பகுதியிருக்கும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மற்றும் மீள்பயன்பாட்டிற்கான சுகாதார அணையாடைகள் ஆகிய இரண்டிலும் சாதாரணமான மாதவிடாய் இரத்தப்போக்கிற்கு வழக்கமான அளவுகளையும், ஆத்திகளவிலான/இரவுநேர மாதவிடாய் இரத்தப்போக்கிற்கு பெரிய அளவுகளையும் கொண்டிருக்கும். சிறந்த மாதவிடாய் சுகாதாரத்தை பராமரிக்க, ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை சுகாதார அணையாடைகளை (ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மற்றும் மீள்பயன்பாட்டிற்குரிய) மாற்ற வேண்டும். பயன்படுத்திய அணையாடைகளை நீண்ட நேரம் அணிவது தோல் எரிச்சல் மற்றும் இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
ஒருமுறை பயன்பாட்டிற்குரிய அணையாடைகள் பயன்பாட்டிற்குப் பிறகு ஒரு குப்பைத் தொட்டியில் எறியப்பட வேண்டும். இது குழாய்களைத் அடைக்கக்கூடியதென்பதால் கழிப்பறையில் வீசக்கூடாது. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சுகாதார அணையாடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல, மேலும் இவை உக்குவதற்கு 600 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இது நிலநிரப்பலுக்கு வழிவகுக்கும். மீள்பயன்பாட்டிற்குரிய சுகாதார அணையாடைகளை பயன்பாட்டிற்குப் பிறகு வெதுவெதுப்பான நீர் மற்றும் சவர்க்காரம் கொண்டு கழுவ வேண்டும். தொற்றுகளை உண்டாக்கும் பக்றீரியா/பூஞ்சைகளை அழிக்க சூரிய ஒளியை UV கதிர்களாகப் பயன்படுத்தி உலர்த்த வேண்டும். முழுவதுமாக காய்ந்தவுடன், இதை அடுத்த காலகட்டத்திற்கு பயன்படுத்தும் வரை குளிர்ந்த, உலர்ந்த பகுதியில் ஒரு பையில் சேமிக்கப்பட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய சுகாதார அணையாடைகளின் விலையானது அதன் வகை மற்றும் பாக்கெட்டில் உள்ள அணையாடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். மீள்பயன்பாட்டிற்குரிய அணையாடைகள் அதிக ஆரம்ப விலையைக் கொண்டுள்ள போதும் பொதுவாக சுமார் 36 சலவைகளுக்கு பயன்படுத்தலாம்.
டேம்போன்கள்(பஞ்சுத்தக்கை)
மாதவிடாய் டேம்போன்கள் பருத்தியுடன் அல்லது பருத்தியில்லாமல் ரேயானால் செய்யப்பட்ட சிறிய சாதனமாகும். இது மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு யோனிக்குள் செருகப்படுகின்றன. சில டேம்போன்களில் செருகுவதற்கு உதவும் பிளாஸ்டிக் அல்லது பேப்பர் அப்ளிகேட்டர் இருக்கலாம். டேம்போன்கள் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு யோனியினுள் விரிவடைகின்றன. டேம்போன்களின் முடிவில் ஒரு நூல் இணைக்கப்பட்டுள்ளது, இது யோனிவாய் வழியாக வெளியேறுகிறது. 4 முதல் 6 மணி நேரம் கழித்து டேம்போனை அகற்ற உதவுகிறது. டேம்போன்கள் லேசான, வழக்கமான மற்றும் அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கிற்கேற்ப வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன, ஆனால் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் - TSS) போன்ற தீவிரமான இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை மாற்ற வேண்டும். ஆரம்பத்தில் செருகுவது தந்திரமானதாக இருந்தாலும், அமர்ந்த நிலை அல்லது கமோடில் ஒரு காலை வைப்பதன் மூலம் இடுப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இதனை செருகுவதை எளிதாக்கவும் உதவும். டேம்போன்கள் உட்புறமாக வைக்கப்படுவதால், அவை பயனருக்கு அதிக அசௌகரியத்தை ஏற்படுத்தாது, மேலும் மாதவிடாய் அனுபவிப்பவர்கள் அதை அணிந்திருக்கும் போது நீந்தலாம் அல்லது மற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். டம்பான்கள் மக்கும் தன்மையுடையவை அல்ல என்பதால் குப்பைத்தொட்டிகளில் அப்புறப்படுத்த வேண்டும்.
மாதவிடாய் கோப்பைகள் (Menstrual cups)
மாதவிடாய் கோப்பைகள் மருத்துவ தரம் வாய்ந்த சிலிக்கன் அல்லது ரப்பரால் தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவை மாதவிடாய் இரத்தத்தை சேகரிக்க யோனிக்குள் மடித்து செருகக்கூடிய நெகிழ்வான சாதனமாகும். அவை வெவ்வேறு அளவுகளில் கிடைக்கப்பெறுகின்றன. இதனைப் பயன்படுத்துவதற்கு முன் கிருமி நீக்கம் செய்வதற்கு அதனை சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து உலர்த்த வேண்டும். அமர்தல் அல்லது இடுப்பை விரிவுபடுத்த கமோடில் ஒரு காலை வைப்பது போன்ற வெவ்வேறு நிலைகளைப் பயன்படுத்தி அதைச் செருகலாம். விட்டத்தைக் குறைப்பதற்கும், செருகுவதை எளிதாக்குவதற்கும் மாதவிடாய் கோப்பை மடிக்கப்படக்கூடிய வகையில் காணப்படுகிறது. மாதவிடாய் கோப்பையை 8 முதல் 12 மணி நேரம் வரை அணியலாம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, கோப்பையின் வால் பகுதியை மெதுவாக கீழே இழுப்பதன் மூலம் கோப்பையை அகற்றலாம், மேலும் மாதவிடாய் இரத்தத்தை மலசலகூடத்தில் அகற்ற வேண்டும். கோப்பையை நேரடியாக மீண்டும் அல்லது தூய்மைப்படுத்தி மீண்டும் செருகலாம். மாதவிடாய் முடிந்த பிறகு, கோப்பையை கழுவி, சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, உலர்த்தி, அடுத்த மாதவிடாய் காலத்தில் பயனப்டுத்தும்வரை சுத்தமாக சேமிக்கப்பட வேண்டும்.
மாதவிடாய் டிஸ்க் Menstrual disc
மாதவிடாய் டிஸ்க் என்பது ஒரு புதிய வகை மாதவிடாய் சுகாதார தயாரிப்பு ஆகும், இது மாதவிடாய் கோப்பை போன்றது, ஆனால் கருப்பை வாய்க்கு கீழே உள்ள யோனி கால்வாயில் ஆழமாக செருகப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய மற்றும் மீள்பயன்பாட்டிற்குரியது என இரண்டு வகையாக இது காணப்படுகிறது. இதனை 12 மணி நேரம் வரை அணியலாம், ஆனால் மாதவிடாய் காலத்தில் அதிகளவான இரத்தப்போக்கிருந்தால், அடிக்கடி மாற்ற வேண்டும். மாதவிடாய் டிஸ்க் அணிந்திருக்கும் போது பயனர்கள் உடலுறவில் ஈடுபட முடியும்.
மாதவிடாய் உள்ளாடைகள்
மாதவிடாய் உள்ளாடைகள் சாதாரண உள்ளாடைகளைப் போலவே இருக்கும், ஆனால் மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் கனமான படலம் ஒன்றைக் கொண்டிருக்கும். கசிவைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பிற்காக இதை தனியாகவோ அல்லது மற்றொரு மாதவிடாய் தயாரிப்புடன் சேர்த்து அணியலாம். பயன்பாட்டிற்குப் பிறகு அதிலுள்ள இரத்தத்தை அகற்ற கைகளால் கழுவ வேண்டும், பின்னர் தொற்றுக்கு வழிவகுக்கும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்க சூரிய ஒளியில் முழுமையாக உலர்த்த வேண்டும். ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கும் இவை மாற்றப்பட வேண்டும்.
இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க மாதவிடாய் சுகாதார பொருட்களை மாற்றுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவுதல் மிகவும் முக்கியமானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், மேலும் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டு நேரத்தை விட தயாரிப்புகளை அதிக நேரம் அணியக்கூடாது, ஏனெனில் இது இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
எந்த முறையைத் தேர்வு செய்தாலும், ஒவ்வொரு முறையின் நன்மை தீமைகளையும் கருத்தில் கொண்டு உங்களுக்கான சிறந்த பொருத்தத்தைக் கண்டறிய வேண்டும்.
எழுத்தாக்கம்
ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம்