மாதவிடாய் | The Family Planning Association of Sri Lanka

மாதவிடாய்

மாதவிடாய் நிறுத்தம் என்பது வாழ்க்கையின் இயற்கையான ஒரு கட்டமாகும். இருப்பினும், இது உடல் ரீதியான, உணர்ச்சி ரீதியான மற்றும் பாலியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தலாம். இவை குறித்து எப்போதும் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. மாதவிடாய் நிறுத்தத்தின்போது என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வது, மாற்றங்களை அடையாளம் காணவும், உங்கள் ஆரோக்கியம் தொடர்பாகத் தெளிவான முடிவுகளை எடுக்கவும், எப்போது சுகாதார நிபுணருடன் தொழில்முறை ஆதரவை நாட வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவும் உதவும்.

FPA Sri Lanka அமைப்பில், மாதவிடாய் நிறுத்தம் என்பது மாதவிடாய் நின்றுவிடுவதை மட்டும் குறிக்காது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இது உடல் ஆரோக்கியம், உணர்ச்சி நலன், உறவுகள் மற்றும் பாலியல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பாதிக்கலாம்.

1. மாதவிடாய் நிறுத்தம் என்றால் என்ன?

கருப்பைகளின் செயல்பாடு மற்றும் இனப்பெருக்க ஹோர்மோன்கள் இயற்கையாகக் குறைவதன் காரணமாக, தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருப்பதே மாதவிடாய் நிறுத்தம் எனப்படுகிறது. இது இனப்பெருக்க காலத்தின் முடிவைக் குறிக்கிறது.

இருப்பினும், மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரே இரவில் நிகழும் ஒரு மாற்றமல்ல. ஹோர்மோன் மாற்றங்கள் பொதுவாகப் பல ஆண்டுகளுக்கு முன்பே, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தில் (Perimenopause) தொடங்குகின்றன. மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முன்பே அறிகுறிகள் ஏற்படலாம்.

2. மாதவிடாய் நிறுத்தம் பொதுவாக எந்த வயதில் தொடங்குகிறது?

இயற்கையான மாதவிடாய் நிறுத்தம் பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் ஏற்படுகிறது. இருப்பினும், ஒவ்வொருவருக்கும் இது நிகழும் வயதில் கணிசமான வேறுபாடுகள் காணப்படலாம்.

மரபியல் காரணிகள், சில மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற காரணிகள் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் காலத்தைப் பாதிக்கலாம். 45 வயதிற்கு முன்னர் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவது ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தம் எனக் கருதப்படுகிறது. அதேவேளை, 40 வயதிற்கு முன்னர் ஏற்படுவது முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் எனப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாட வேண்டும்.

3. மாதவிடாய் நிறுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகள் யாவை?

மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். மாதவிடாய் ஒழுங்கற்றதாக மாறலாம், குறுகிய அல்லது நீண்ட இடைவெளிகளில் ஏற்படலாம் அல்லது இரத்தப்போக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

பிற ஆரம்ப அறிகுறிகளில் உடலில் திடீரென ஏற்படும் வெப்ப அலைகள் (Hot flushes), இரவில் அதிகமாக வியர்த்தல், தூக்கப் பிரச்சினைகள், மனநிலை மாற்றங்கள், சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம், யோனி வறட்சி மற்றும் பாலியல் விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

4. மாதவிடாய் நிறுத்தம் ஏன் பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது?

இதற்கான முக்கியக் காரணம் ஹோர்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக ஈஸ்ட்ரஜன் அளவில் ஏற்படும் மாற்றங்களாகும். ஈஸ்ட்ரஜன், இனப்பெருக்க அமைப்பு, மூளை, எலும்புகள் மற்றும் இதய இரத்த நாள அமைப்பு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளைப் பாதிக்கிறது.

ஹோர்மோன் அளவுகள் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி இறுதியில் குறையும்போது, வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு வகையான அறிகுறிகளின் கலவையை அனுபவிக்கலாம். இதனால்தான் அனைவருக்கும் ஒரே மாதிரியான “மாதவிடாய் நிறுத்த அனுபவம்” இருப்பதில்லை.

5. மாதவிடாய் நிறுத்தம் மனநலன் மற்றும் உணர்ச்சி நலனைப் பாதிக்குமா?

ஆம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான மாற்றக் காலத்தில் சிலர் எரிச்சல், பதற்றம், மனச்சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது உணர்ச்சி நலனில் மாற்றங்கள் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.

ஹோர்மோன் மாற்றங்கள் இதற்குப் பங்களிக்கலாம். அதேவேளை, போதிய தூக்கமின்மை, வெப்ப அலைகள், மன அழுத்தம், உறவுகள் மற்றும் பிற வாழ்க்கைச் சூழ்நிலைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து நீடிக்கும் அல்லது கடுமையான பதற்றம் அல்லது மனச்சோர்வை மாதவிடாய் நிறுத்தத்தால் மட்டுமே ஏற்படுவதாகக் கருதக்கூடாது. பொருத்தமான ஆதரவைப் பெற சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாடுங்கள்.

6. மாதவிடாய் நிறுத்தம் பாலியல் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?

ஆம். ஈஸ்ட்ரஜன் அளவு குறைவதால் யோனி வறட்சி மற்றும் யோனித் திசுக்களில் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் உடலுறவின்போது அசௌகரியம் அல்லது வலி ஏற்படலாம்.

சிலர் பாலியல் விருப்பம் அல்லது பாலியல் தூண்டுதலிலும் மாற்றங்களை அனுபவிக்கலாம். ஹோர்மோன்கள், தூக்கம், மன அழுத்தம், மருந்துகள், உணர்ச்சி நலன் மற்றும் உறவுகள் சார்ந்த காரணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மாற்றங்கள் ஏற்படலாம்.

7. மாதவிடாய் நிறுத்தம் உங்கள் பாலியல் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கிறதா?

நிச்சயமாக இல்லை. மாதவிடாய் நிறுத்தம் என்பது பாலியல் இன்பம், நெருக்கம் அல்லது உறவுகள் முடிவுக்கு வர வேண்டும் என்று அர்த்தமல்ல.

சிலர் பாலியல் விருப்பம் அல்லது உடல் ரீதியான சௌகரியத்தில் மாற்றங்களை அனுபவிக்கலாம். இருப்பினும், இவற்றில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். காரணத்தைப் பொறுத்து, மசகு திரவங்கள், யோனி ஈரப்பதமாக்கும் பதார்த்தங்கள், பொருத்தமான மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நிபுணரின் ஆதரவு ஆகியவை உதவக்கூடும்.

8. எப்போது ஒரு சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாட வேண்டும்?

அறிகுறிகள் உங்கள் வாழ்க்கைத் தரம், தூக்கம், உறவுகள் அல்லது பாலியல் நல்வாழ்வைப் பாதித்தால், தொழில்முறை ஆலோசனையைப் பெறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

எதிர்பாராத இரத்தப்போக்கு, குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு, மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறி என்று தானாகவே கருதாமல், சுகாதாரப் பராமரிப்பு நிபுணரால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

FPA Sri Lanka பற்றி

இலங்கையின் குடும்பத் திட்டமிடல் சங்கம் (Family Planning Association of Sri Lanka – FPA Sri Lanka), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான தகவல்களையும் சேவைகளையும் வழங்குகிறது. Bloom by FPA Sri Lanka ஊடாக, மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, பல்வேறு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தகவல் மற்றும் இரகசியமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இரகசியமான ஆதரவு தேவையா?: Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

மருத்துவத் தகவல்: இந்தக் கட்டுரை பொதுவான சுகாதாரத் தகவல்களை வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இது தகுதிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் நேரடியாகப் பெறப்படும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளும் அதற்கான சிகிச்சைத் தெரிவுகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By