இக்காலப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் எவை? | The Family Planning Association of Sri Lanka

இக்காலப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் எவை?

வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கியமான ஒரு பகுதியாக பாலியல் ஆரோக்கியம் தொடர்ந்து காணப்படுகிறது. மாதவிடாய் நிறுத்தம் பாலியல் விருப்பம், பாலியல் தூண்டுதல், யோனி ஈரப்பதம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றைப் பாதிக்கலாம். ஆனால், இந்த மாற்றங்கள் பாலியல் இன்பம் அல்லது நெருக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்று அர்த்தமல்ல.

1. மாதவிடாய் நிறுத்தம் பாலியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்?

ஈஸ்ட்ரஜன் அளவு குறைவதால், யோனித் திசுக்கள் மற்றும் ஈரப்பதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். சிலர் பாலியல் விருப்பம், பாலியல் தூண்டுதல் அல்லது பாலியல் எதிர்வினையிலும் மாற்றங்களைக் கவனிக்கலாம்.

இந்த உடல் ரீதியான மாற்றங்கள் உணர்ச்சி நலன், தூக்கம், மன அழுத்தம், மருந்துகள் மற்றும் உறவுகள் சார்ந்த காரணிகளுடன் ஒன்றோடொன்று தொடர்புபடலாம்.

2. மாதவிடாய் நிறுத்தத்தால் பாலியல் தூண்டுதல் ஏற்படுவது கடினமாகுமா?

மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு, பாலியல் தூண்டுதல் ஏற்பட அதிக நேரம் எடுப்பதையோ அல்லது அது முன்பைவிட வித்தியாசமாக இருப்பதையோ சிலர் உணரலாம்.

யோனி ஈரப்பதம் குறைவதால் பாலியல் செயல்பாடுகளின்போது அசௌகரியமும் ஏற்படலாம். பாலியல் தூண்டுதலுக்குப் போதிய நேரம் ஒதுக்குதல், துணையுடன் கலந்துரையாடுதல் மற்றும் யோனி வறட்சியைக் கையாளுதல் ஆகியவை இதனை கையாள உதவக்கூடும்.

3. மாதவிடாய் நிறுத்தம் உச்சகட்ட இன்பத்தை (Orgasm) பாதிக்குமா?

சிலர் தங்களின் பாலியல் எதிர்வினையில் மாற்றங்களைக் கவனிக்கலாம். இதில் உச்சகட்ட இன்பத்தை அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வது அல்லது உச்சகட்ட இன்பத்தில் மாற்றம் ஏற்படுவது ஆகியவை அடங்கும்.

ஹோர்மோன் மாற்றங்கள், மருந்துகள், மன அழுத்தம், மனநிலை, உறவுகள் சார்ந்த காரணிகள் மற்றும் உடல் ரீதியான அசௌகரியம் உள்ளிட்ட பல காரணிகள் இதற்குப் பங்களிக்கலாம்.

4. மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டால், உடலுறவில் ஆர்வத்தை இழந்துவிடுவேனா?

இல்லை. பாலியல் விருப்பம் ஒவ்வொருவருக்கும் பெருமளவில் மாறுபடக்கூடியது.

சிலருக்கு பாலியல் விருப்பம் குறையலாம். அதேவேளை, வேறு சிலருக்கு மிகக் குறைந்த மாற்றங்களே ஏற்படலாம். கர்ப்பம் அல்லது மாதவிடாய் குறித்த கவலைகள் இல்லாமல் போவது போன்ற காரணங்களால், மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு சிலர் தங்களின் பாலியல் உணர்வுகள் குறித்து அதிக சௌகரியமாகவும் உணரலாம்.

5. மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகும் உடலுறவு இன்பமானதாக இருக்குமா?

ஆம். மாதவிடாய் நிறுத்தம் என்பது பாலியல் இன்பம் அல்லது நெருக்கத்தின் முடிவைக் குறிக்காது.

யோனி வறட்சி, வலி அல்லது பாலியல் எதிர்வினையில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் அனுபவத்தைப் பாதித்தால், இவற்றில் பல பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான வழிகள் உள்ளன.

6. உடலுறவு அசௌகரியமாக மாறியிருந்தால் நான் என்ன செய்யலாம்?

பாலியல் செயல்பாடுகளின்போது உராய்வைக் குறைக்க மசகு திரவங்கள் (Lubricants) உதவலாம். தொடர்ந்து காணப்படும் யோனி வறட்சியைக் குறைக்க யோனி ஈரப்பதமளிக்கும் பதார்த்தங்கள் (Vaginal moisturisers) உதவக்கூடும்.

அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால், யோனி ஈஸ்ட்ரஜன் சிகிச்சையோ (local vaginal oestrogen) அல்லது வேறு சிகிச்சையோ பொருத்தமானதா என்பதைச் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் மதிப்பீடு செய்ய முடியும்.

7. பாலியல் பிரச்சினைகள் குறித்து எனது சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் பேச வேண்டுமா?

ஆம். பாலியல் ஆரோக்கியம் என்பது சுகாதாரப் பராமரிப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

யோனி வறட்சி, வலியுடன் கூடிய உடலுறவு, பாலியல் விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பாலியல் தூண்டுதல் தொடர்பான கவலைகள் குறித்து சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுடன் கலந்துரையாடலாம். மரியாதையுடனும் இரகசியத்தன்மை பேணப்பட்டும் வழங்கப்படும் சுகாதாரப் பராமரிப்பைப் பெற நீங்கள் தகுதியானவர்.

8. இரகசியத்தன்மை பேணப்படும் ஆதரவை எங்கே பெற்றுக்கொள்ளலாம்?

மாதவிடாய் நிறுத்தம் உங்கள் பாலியல் நல்வாழ்வைப் பாதித்தால், தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாடுங்கள்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான இரகசியத்தன்மை பேணப்படும் ஆதரவைப் பெற, Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

FPA Sri Lanka பற்றி

இலங்கையின் குடும்பத் திட்டமிடல் சங்கம் (Family Planning Association of Sri Lanka – FPA Sri Lanka), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான தகவல்களையும் சேவைகளையும் வழங்குகிறது. Bloom by FPA Sri Lanka ஊடாக, மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, பல்வேறு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தகவல் மற்றும் இரகசியமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இரகசியமான ஆதரவு தேவையா?: Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

மருத்துவத் தகவல்: இந்தக் கட்டுரை பொதுவான சுகாதாரத் தகவல்களை வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இது தகுதிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் நேரடியாகப் பெறப்படும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளும் அதற்கான சிகிச்சைத் தெரிவுகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By