மாதவிடாய் நிறுத்தம் மாதவிடாய் சுழற்சியை மட்டுமல்லாது, பல விடயங்களையும் பாதிக்கலாம். ஹோர்மோன் மாற்றங்கள் தூக்கம், மனநிலை மாற்றங்கள், கவனம் செலுத்தும் திறன், பாலியல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் ஆகியவற்றைப் பாதிக்கலாம். அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் பெருமளவில் மாறுபடும். ஏற்படக்கூடிய மாற்றங்களைப் புரிந்துகொள்வது, எப்போது சுகாதார நிபுணருடன் தொழில்முறை ஆதவுகளைப் பெறுவது பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும்.
1. மாதவிடாய் நிறுத்தத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகள் யாவை?
பொதுவான அறிகுறிகளில் உடலில் திடீரென ஏற்படும் வெப்ப அலைகள் (Hot flushes), இரவில் அதிகமாக வியர்த்தல், ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கப் பிரச்சினைகள், மனநிலை மாற்றங்கள், சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம், யோனி வறட்சி மற்றும் பாலியல் விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.
சிலருக்கு தலைவலி, மூட்டு மற்றும் தசை வலிகள், தோல் மற்றும் தலைமுடியில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது சிறுநீர் தொடர்பான அறிகுறிகளும் ஏற்படலாம். அனைவருக்கும் இந்த அறிகுறிகள் அனைத்தும் ஏற்படுவதில்லை. மேலும், அவற்றின் தீவிரமும் மாறுபடலாம்.
2. உடலில் திடீரென ஏற்படும் வெப்ப அலைகள் ஏன் ஏற்படுகின்றன?
ஹோர்மோன் மாற்றங்கள் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் மூளையின் செயல்பாட்டைப் பாதிப்பதால் வெப்ப அலைகள் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் திடீரெனக் கடுமையான வெப்ப உணர்வை ஒருவர் அனுபவிக்கலாம். சில சமயங்களில் இதைத் தொடர்ந்து வியர்த்தல் மற்றும் குளிர் உணர்வும் ஏற்படலாம். சிலருக்கு வெப்ப அலைகள் லேசாகவும் அவ்வப்போது மட்டுமே ஏற்படலாம். மற்றவர்களுக்கு அவை தூக்கத்தையும் அன்றாடச் செயல்பாடுகளையும் கணிசமாகப் பாதிக்கலாம்.
3. மாதவிடாய் நிறுத்தம் தூக்கத்தைப் பாதிக்குமா?
ஆம். இரவில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை மீண்டும் மீண்டும் தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்யலாம். அதேவேளை, ஹோர்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவையும் தூங்கத் தொடங்குவதையோ அல்லது தொடர்ந்து தூங்குவதையோ கடினமாக்கலாம்.
போதிய தூக்கமின்மை பகல் நேரச் சோர்வு, எரிச்சல் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இதனால் பல அறிகுறிகள் ஒன்றையொன்று பாதிக்கும் ஒரு சுழற்சியை உருவாகலாம்.
4. மாதவிடாய் நிறுத்தத்தால் மந்தநிலை (Brain fog) ஏற்படுமா?
மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலத்திலும் மாதவிடாய் நிறுத்தக் காலத்திலும் சிலர் கவனம் செலுத்துவதில் சிரமம், விடயங்களை நினைவில் வைத்துக்கொள்வதில் சிரமம் அல்லது தெளிவாகச் சிந்திக்க முடியாத உணர்வு ஆகியவற்றை அனுபவிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
தூக்கத் தடைகள், மன அழுத்தம், பதற்றம் மற்றும் பிற காரணிகளும் இதற்குப் பங்களிக்கலாம். நினைவாற்றல் அல்லது கவனம் செலுத்தும் திறனில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலோ, மோசமடைந்தாலோ அல்லது அன்றாட வாழ்க்கையைப் பாதித்தாலோ, அவை மாதவிடாய் நிறுத்தத்தால் மட்டுமே ஏற்படுகின்றன என்று கருதாமல் சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாடுங்கள்.
5. மாதவிடாய் நிறுத்தம் மனநிலையைப் பாதிக்குமா?
ஆம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான மாற்ற காலத்தில் சிலர் எரிச்சல், பதற்றம், மனச்சோர்வு அல்லது உணர்ச்சி ரீதியான மாற்றங்களை அனுபவிக்கலாம்.
ஹோர்மோன் மாற்றங்கள் இதில் ஒரு பங்கு வகிக்கலாம். இருப்பினும், வாழ்க்கைச் சூழ்நிலைகள், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை ஆகியவையும் பங்களிக்கலாம். தொடர்ந்து காணப்படும் மனச்சோர்வு, கடுமையான பதற்றம் அல்லது அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடும் அறிகுறிகள் குறித்து சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் கலந்துரையாட வேண்டும்.
6. மாதவிடாய் நிறுத்தம் உடல் எடை மற்றும் உடல் அமைப்பைப் பாதிக்குமா?
நடுத்தர வயதுக் காலத்தில் உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானதாகும். ஹோர்மோன் மாற்றங்கள், வயது முதிர்வு, தசை நிறை குறைதல், உடல் செயல்பாடு, தூக்கம் மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆகிய அனைத்தும் உடல் எடையிலும் உடலில் கொழுப்பு சேமிக்கப்படும் இடங்களிலும் ஏற்படும் மாற்றங்களுக்குப் பங்களிக்கலாம்.
உடல் எடையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் மாதவிடாய் நிறுத்தமே ஒரே காரணம் என்று கருதக்கூடாது. உங்களுக்குப் பொருத்தமான காரணிகளைக் கண்டறிய சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் உதவ முடியும்.
7. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள் காலப்போக்கில் மறைந்துவிடுமா?
வெப்ப அலைகள் போன்ற சில அறிகுறிகள் காலப்போக்கில் குறையலாம். இருப்பினும், அவை நீடிக்கும் காலம் ஒவ்வொருவருக்கும் கணிசமாக மாறுபடும்.
ஈஸ்ட்ரஜன் அளவு குறைவதுடன் தொடர்புடைய யோனி மற்றும் சிறுநீர் தொடர்பான அறிகுறிகள் மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகும் நீடிக்கலாம். சில சமயங்களில் அவை மேலும் வெளிப்படையாகவும் உணரப்படலாம். அறிகுறிகள் தொடர்ந்து உங்கள் சௌகரியம், ஆரோக்கியம் அல்லது பாலியல் நல்வாழ்வைப் பாதித்தால், அதற்கான சிகிச்சைத் தெரிவுகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்க.
8. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளை எவ்வாறு கையாளலாம்?
அறிகுறிகள், அவற்றின் தீவிரம் மற்றும் உங்கள் தனிப்பட்ட உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து அவற்றைக் கையாளும் முறைகள் மாறுபடும். வாழ்க்கைமுறை மாற்றங்கள், ஹோர்மோன் அல்லாத சிகிச்சைகள், local vaginal oestrogen சிகிச்சைகள் அல்லது பொருத்தமான நபர்களுக்கான ஹோர்மோன் சிகிச்சை ஆகியவை இதில் அடங்கலாம்.
அனைவருக்கும் பொருத்தமான ஒரே சிகிச்சை என்று எதுவும் இல்லை. கிடைக்கக்கூடிய தெரிவுகளைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றின் சாத்தியமான நன்மைகள் மற்றும் அபாயங்களை மதிப்பிடுவதற்கும் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் உங்களுக்கு உதவ முடியும்.
இரகசியத்தன்மை பேணப்படும் ஆதரவைப் பெற, Bloom by FPA Sri Lanka அமைப்பை
077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
FPA Sri Lanka பற்றி
இலங்கையின் குடும்பத் திட்டமிடல் சங்கம் (Family Planning Association of Sri Lanka – FPA Sri Lanka), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான தகவல்களையும் சேவைகளையும் வழங்குகிறது. Bloom by FPA Sri Lanka ஊடாக, மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, பல்வேறு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தகவல் மற்றும் இரகசியமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இரகசியமான ஆதரவு தேவையா?: Bloom by FPA Sri Lanka அமைப்பை 077 955 2979 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
மருத்துவத் தகவல்: இந்தக் கட்டுரை பொதுவான சுகாதாரத் தகவல்களை வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இது தகுதிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணரிடம் நேரடியாகப் பெறப்படும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளும் அதற்கான சிகிச்சைத் தெரிவுகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.