மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) மற்றும் பெறப்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி (AIDS) ஆகியவை உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார பிரச்சனையாகவே உள்ளது. சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்ந்து கடுமையான சவால்களை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் எச்.ஐ.வி/எய்ட்ஸின் சிக்கல்கள் பற்றிய இந்த விரிவான கண்ணோட்டம் முக்கிய உண்மைகள் மற்றும் தகவல்கள், பரவும் முறைகள், ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய காரணிகள், பரிசோதனை மற்றும் ஆலோசனை முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
எமது பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், இது ஒரு முக்கியமான பொதுசுகாதாரப் பிரச்சனையாகவே உள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் AIDS-ஐ முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவருவது முக்கிய இலக்காகும்.
HIV/AIDS முதன்மையாக மூன்று முக்கிய வழிகள் வழியாகப் பரவுகிறது:
பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு: ஆணுறைகளைப் பயன்படுத்தாமல் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது எச்.ஐ.வி பரவுவதற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் வைரஸ் உடல் திரவங்கள் மூலம் பரவக்கூடும்.
ஊசிகள் அல்லது ஊசிக்குழல்களைப் பகிர்ந்து கொள்வது: எச்.ஐ.வி பாதிப்பிற்குள்ளான நபருடன் ஊசிகள் அல்லது ஊசிக்குழல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றொரு பொதுவான பரவல் முறையாகும், குறிப்பாக மருந்துகளை ஊசி மூலம் செலுத்தும் நபர்களிடையே இது பரவுகிறது.
தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல்: கர்ப்பம், பிரசவம் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது எச்.ஐ.வி பாதிப்பிற்குள்ளான தாயிடமிருந்து அவரது குழந்தைக்கு எச்.ஐ.வி பரவலாம்.
HIV தொற்றுக்கான ஆபத்து காரணிகள
இலங்கையில் HIV தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் பல காரணிகள் உள்ளன. அவையாவன:
பாதுகாப்பற்ற பாலியல் பழக்கங்கள்: பல பாலியல் இணைப்பாளர்களுடன் அல்லது HIV-வால் பாதிக்கப்பட்ட நபருடன் பாதுகாப்பில்லாத பாலியல் உறவில் ஈடுபடுவது, HIV பரவலுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
ஊசிகள் அல்லது ஊசிக்குழல்களைப் பகிர்ந்து கொள்வது: போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடையே ஊசிகள் அல்லது ஊசிக்குழல்களைப் பகிர்ந்து கொள்வது HIV பரவும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் வரலாறு (STIs): பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் வரலாற்றைக் கொண்டிருப்பது பலவீனமான சீதமென்சவ்வுகள் காரணமாக HIV தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு: காசநோய் போன்ற நோய்கள் அல்லது சில மருந்துகளால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்ட நபர்கள் HIV தொற்றுக்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.
HIV தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பின்வரும் கட்டங்களை கடந்து செல்ல நேரிடும்.
சிலருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைவலி மற்றும் தோலில் சொறி போல் புள்ளிகள் போன்ற குறுகிய கால காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும். இது தொற்றின் ஆரம்ப நிலையாகும், இதனை தீவிர நிலை (Acute Stage) அல்லது சீரோகான்வர்ஷன் நோய்நிலை (Seroconversion Illness) என்று அழைக்கின்றனர். இருப்பினும், சிலருக்குஇந்த தீவிர நிலையில் எந்தத் தெரியும் அறிகுறிகளும் இல்லாமல் இருக்கக்கூடும், அல்லது அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கலாம் என்பதால், அந்த நிலை கவனிக்கப்படாமல் போவதோடு, பொதுவான காய்ச்சலுக்கான அறிகுறி என தவறாக நினைக்கலாம்.
தீவிர HIV தொற்று அல்லது சீரோகான்வர்ஷன் நிலையின்போது, ரத்தத்தில் உள்ள HIV வைரஸின் அளவு மிகவும் அதிகமாக இருக்கலாம். இது, HIV பரவலுக்கான ஆபத்தை பெரிதும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, யாராவது தங்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தால், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டத்தில் சிகிச்சை தொடங்கப்பட்டால், ஒரு நபர் தங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காணலாம்.
நீடித்த HIV தொற்று (Chronic HIV Infection), அறிகுறியில்லா HIV தொற்று அல்லது மருத்துவ நீடித்த நிலை (Clinical Latency) என்றும் அழைக்கப்படுகிறது. இது HIV தொற்றின் இரண்டாவது நிலையாகும். இந்த நிலையில், வைரஸ் உடலில் தொடர்ந்து பெருக்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அது மெதுவாக நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைத்து, நோயை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கிறது. நீண்டகால எச்.ஐ.வி தொற்று உள்ள ஒருவர் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல், அறிகுறியற்றவராக இருக்க வாய்ப்புள்ளது. நீடித்த HIV தொற்று பொதுவாக எய்ட்ஸ் நிலைக்கு செல்ல எட்டு முதல் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகும், இருப்பினும் சிகிச்சையின்றி இருந்தால், சில சந்தர்ப்பங்களில் இது விரைவில் AIDS நிலைக்கு முன்னேறக்கூடும்.
HIV தொற்றுடன் உள்ள ஒருவர் சிகிச்சை இல்லாமல் நீண்ட காலம் செல்லும் போது, அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து, சில வகையான புற்றுநோய்கள் போன்ற எதிர்க்க முடியாத தொற்றுநோய்களை பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது HIV-இன் மேம்பட்ட நிலையாகும், இதில் வைரஸ் அளவு (Viral Load) மிகவும் அதிகமாகவும், பிறருக்கு HIV பரவுவதற்கான சாத்தியம் எளிதாகவும் இருக்கும். AIDS நோய்த்தொற்றுள்ளவர்கள் சிகிச்சை பெறாமல் இருந்தால், அவர்கள் பொதுவாக சில ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழக்கூடும்.
இந்த அறிகுறிகள் எதுவும் தோன்றினால், HIV/AIDS பரிசோதனையை உடனடியாகச் செய்வது மிகவும் முக்கியம், ஏனெனில் ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் சிகிச்சையை சரியான நேரத்தில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
இலங்கையில் HIV/AIDS நோய்க்கான பரிசோதனை மற்றும் ஆலோசனை
HIV/AIDS கண்டறிதலுக்காக ஆரம்ப நிலையில் சில வகையான திரைமுக (screening) பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. பரிசோதனை நேர்மறையாக (positive) இருந்தால், மேலும் உறுதி செய்யும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உறுதிப்பரிசோதனையில் HIV-பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டால், பரிசோதனைக்குப் பிறகான ஆலோசனை (post-test counselling) மூலம் நோயாளிக்கு அவரது நிலை பற்றி அறிவிக்கப்படுகிறது.
ஒருவருக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டால், விரைவில் சிகிச்சையைத் பெறுவதற்காக அவர் HIV பராமரிப்பு சேவைகளுடன் இணைக்கப்படுகிறார்கள். Negative என பரிசோதனை முடிவு வந்தால், எதிர்காலத்தில் HIV தொற்று ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்த தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
இலங்கையில் HIV பரிசோதனை ரகசியமாகவும் இலவசமாகவும் செய்யப்படுகிறது. இந்த சேவைகள் அரச வைத்தியசாலைகள், மருத்துவ மையங்கள், மற்றும் அரச சாரா நிறுவனங்களில் (NGO) பரிசோதனை சேவைகள் கிடைக்கின்றன.
HIV சுய பரிசோதனை (Self-testing) என்பதும் ஒரு முறையாகும். சுய பரிசோதனையின் மூலம், ஒருவர் தங்களது வீட்டிலோ அல்லது தனிப்பட்ட இடமொன்றிலோ HIV பரிசோதனை செய்து, முடிவை நேரடியாக அறிய முடியும். HIV சுய பரிசோதனை மூலம் 20 நிமிடங்களில் முடிவுகளை பெறலாம். சுய பரிசோதனை கருவிகளை 0112667163 என்ற அரசாங்க துரித இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது Know4sure இணையதளத்தினூடான முன்பதிவு அமைப்பின் மூலமாகவோ பெறலாம். இந்த சேவைகள் நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெறுகின்றன.
இலங்கை குடும்பத்திட்ட சங்கம், HIV தொற்றுக்குள்ளான நபர்களுக்கும், HIV தொற்று ஆபத்தில் உள்ள நபர்களுக்கும் ஆலோசனை சேவைகள், ஆதரவு, தகவல் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
ஆலோசனை சேவைகள் குறித்த மேலும் தகவல்களுக்கு, Alokaya ஆலோசனை நிலையத்தை (Alokaya Counselling Centre) 077 9895252 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். HIV/STD பரிசோதனைகளை முன்பதிவு செய்ய – 077 955 2979 என்ற எண்ணை அழைக்கவும்.
HIV தொற்று ஏற்படாமல் தடுக்க ஒருவர் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் என்ன?
HIV பரிசோதனை செய்தல்: பாலியல் உறவில் ஈடுபடும் முன், உங்கள் துணையுடன் HIV பரிசோதனை குறித்து கலந்துரையாடி , இருவரும் பரிசோதனை செய்துகொள்ளவும் பரிந்துரை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியான ஆணுறை பயன்பாடு: பாலியல் உறவின்போது சரியான முறையில் மற்றும் எப்போதும் ஆணுறை பயன்படுத்துவது, HIV பரவலை தடுக்கும் மிக முக்கியமான வழிமுறையாகும்.
ஊசிகளை பகிர்வதை தவிர்த்தல்: போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்களிடையே ஊசி அல்லது ஊசிக்குழல்களை பகிர்வதை தடுப்பது மற்றும் அதனைத் தவிர்க்க ஊக்குவிப்பது அவசியம்.
பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு உடனடி சிகிச்சை பெறுதல்: HIV தொற்று அபாயத்தைக் குறைக்க பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு உடனடி மற்றும் பயனுள்ள சிகிச்சையை பெறுவது அவசியம்.
HIV வெளிப்பாட்டுக்கு முன்னான தடுப்பு (PreP): HIV தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ள நபர்கள், PrEP எனப்படும் தடுப்புமருந்தை (வெளிப்பாட்டுக்கு முன்னான தடுப்பு) பயன்படுத்துவதன் மூலம் HIV தொற்றுக்குள்ளாவதற்கான சாத்தியத்தை குறைக்க முடியும்.
பாலியல் வெளிப்பாட்டிற்குப் பின்னரான தடுப்பு (PEPSE) - PEPSE என்பது HIV-பாதிக்கப்பட்ட துணையுடன் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புக்குப் பிறகு HIV தொற்றைத் தடுக்க நிர்வகிக்கப்படும் ஆன்டி-ரெட்ரோவைரல் மருந்துகளின் ஒரு சிகிச்சையாகும். நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டாலோ அல்லது ஆணுறை சேதமடைந்தாலோ இதைப் பயன்படுத்தலாம். இந்த சிகிச்சையின் மூலம் அதிகபட்ச பாதுகாப்பு வழங்க, பாதுகாப்பற்ற தொடர்புக்குப் பிறகு மிக விரைவாக, 24 மணி நேரத்துக்குள், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மிகவும் தாமதமாகினால் 72 மணி நேரத்துக்குள் ஆரம்பிக்க வேண்டும்.
HIV தொற்றுக்குள்ளான நபர், தொற்று பிறருக்குப் பரவாமல் தடுக்கும் விதமாக எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவை?
HIV மருந்துகள்/ஆன்டிரெட்ரோவைரல் தெரபியில்(ART) பரிந்துரைக்கப்பட்டபடி சரியாக சிகிச்சை எடுத்துக்கொள்வது: ART (Antiretroviral Therapy) என்பது HIV-க்கு மருந்தாகக் கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும். இது HIV-ஐ முழுமையாக குணமாக்க முடியாது என்றாலும், உடலில் உள்ள வைரஸ் அளவை (Viral Load) குறைக்கிறது. ART-இன் முக்கியமான நோக்கங்களில் ஒன்று, வைரஸ் அளவை கண்டறிய முடியாத அளவிற்கு (Undetectable Viral Load) குறைப்பதுதான். இரத்தத்தில் வைரஸ் அளவு கண்டறிய முடியாத அளவாக இருப்பது என்றால், அதனை வைரஸ் பரிசோதனை சாதனம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குறைவான நிலையில் வைத்திருப்பதாக பொருள். இந்த நிலையில் உள்ள HIV-தொற்றுடைய நபர்கள், HIV-தொற்றில்லாத துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாலும் வைரஸ் பரவும் ஆபத்து மிகக் குறைவாக/ இல்லை என்றே கருதப்படுகிறது.
உடலுறவின் போது, ஆணுறைகளை சரியாகவும் சீராகவும் பயன்படுத்தல்.
உங்கள் துணையுடன் PrEP (Pre-Exposure Prophylaxis) எடுத்தல் பற்றி கலந்துரையாடவும்.
ஊசிகள், ஊசிக்குழல்கள் அல்லது பிற மருந்து உபகரணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
HIV/AIDS இற்கான சிகிச்சை
HIV சிகிச்சைக்கு ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (ART) என்று பெயர். ART என்பது தினசரி HIV மருந்துகளின் கலவை (HIV treatment regimen) எடுத்துக்கொள்வதைக் குறிக்கிறது. ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (ART) HIV/AIDS சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பிறருக்கு HIV பரவுவதைத் தடுக்கிறது, வைரஸை திறம்பட கட்டுப்படுத்துகிறது, அத்தோடு HIV நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுகிறது.
இலங்கையில் ART சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியில் சேவையை வழங்குவதற்கு 30 ART சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
HIV/AIDS நோயுடன் வாழ்தல்
சிகிச்சை முறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமும், வழக்கமான மருத்துவ கண்காணிப்பு மூலமும், HIV/AIDS நோயுடன் வாழும் நபர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க முடியும். சிகிச்சையின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், ஏதேனும் சாத்தியமான சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கும் வழக்கமான பின்தொடர்வு சந்திப்புகள்(Regular follow-up appointments) அவசியம்.
HIV/AIDS உடன் வாழும் நபர்களுக்கான வளங்கள்
HIV/AIDS உடன் வாழும் நபர்களுக்கு ஆதரவு வழங்க பல்வேறு வளங்கள் (resources) காணப்படுகின்றன. மேலதிக தகவல்களுக்கு, இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தை
011 255 5455, 077 955 2979 அல்லது 076 588 4881 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து சுகாதார பணியாளர்களும் சிறப்பு பயிற்சி பெற்றவர்களாக இருப்பதுடன், இரகசியத்தன்மையைப் பேணல் முதன்மையாகக் கருதப்படுகிறது.
உசாத்துணைகள்
தகவல் தாள்கள் (Fact Sheets). (திகதி குறிப்பிடப்படவில்லை) - HIV.Info.NIH.Gov தளத்திலிருந்து பெறப்பட்டது: https://hivinfo.nih.gov/home-page
இலங்கை, சுகாதார அமைச்சு (திகதி குறிப்பிடப்படவில்லை) - தேசிய பாலியல் நோய்/ எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம்: https://www.aidscontrol.gov.lk/ இணைப்பிலிருந்து பெறப்பட்டது.
எழுத்தாக்கம்
இலங்கை குடும்பத்திட்ட சங்கம்