PCOS என்பது இனப்பெருக்க வயதிலுள்ள 10 பெண்களில் ஒருவரை பாதிக்கும் ஒரு பொதுவான ஹோர்மோன் ஏற்றத்தாழ்வு நிலையாகும். இது இளம் பெண்களிடையே தற்போது பொதுவானதாகி வருகிற அதேவேளை கருவுறாமை, உடல் பருமன் மற்றும் நீரிழிவு (இன்சுலின் எதிர்ப்பு) போன்ற சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். PCOS இன் சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, ஆனால் இதற்கான காரணம் ஹோர்மோன் ஏற்றத்தாழ்வு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் மரபியல் போன்றவற்றின் கலவையாக கருதப்படுகிறது.
PCOS உள்ள பெண்களைக் கண்டறிய 3 முக்கிய அறிகுறிகள் உள்ளன, அவற்றில் பின்வருவன அடங்கும்:
ஒழுங்கற்ற அல்லது தவறிய மாதவிடாய்
முகப்பரு அல்லது ஆண்களைப் போன்ற முடி வளர்ச்சி (அதிகப்படியான முடி வளர்ச்சி) போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய உயர் தெசுத்தெசுத்திரோன் அளவுகள்
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் நீர்க்கட்டிகளைக் கொண்ட சூலகத்தின் தோற்றம்
PCOSஐக் கண்டறிய மேலே உள்ள 3 அறிகுறிகளில் 2 மட்டுமே போதுமானது. இருப்பினும் இதற்கு மேலதிகமாக சோர்வு, தூக்கமின்மை, பதட்டம், தாழ்வு மனநிலை, முடி அடர்த்தி குறைதல்/ இழப்பு, உடல் எடை இழப்பதில் சிரமம் மற்றும் தலைவலி போன்ற இன்னும் பல அறிகுறிகள் இருக்கலாம்.
PCOSஇனை பூரணமாக குணப்படுத்துவதற்கு எந்த வழிமுறைகளும் இல்லை, ஆனால் பல சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே மேலே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்தால் ஒரு சுகாதார நிபுணரிடம் பேசுவது முக்கியமாகும். இதன் மூலம் அறிகுறிகளை முறையாக கண்காணிக்கவும் PCOSஐ சரியாக நிர்வகிக்கவும் உதவக்கூடிய ஒரு முறையான மேலாண்மை திட்டத்தைத் தொடங்க முடியும்.
சிகிச்சை முறைகள்
வாழ்க்கை முறை மாற்றங்கள்
PCOSஐ நிர்வகிப்பதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் பிரதானமாக உள்ளன. அதிக புரத உட்கொள்ளல், அதிகரித்த நார்ச்சத்து உட்கொள்ளல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைவாக உட்கொள்வது ஆகியவற்றுடன் ஒரு சீரான உணவு பழக்கத்தை உறுதி செய்வது PCOS நிலைமையில் இருந்து மேம்படுத்த உதவும். வாரத்தில் ஐந்து நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது நன்மை தரும். அத்தோடு ஒட்டுமொத்த எடை இழப்பு மாதவிடாய் சுழற்சிகளை முறைப்படுத்தவும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உதவும். ஒரு மனநல நிபுணர் மூலமான உளவியல் ஆதரவு PCOS உடன் தொடர்புடைய உளவியல் அறிகுறிகளையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
மன அழுத்தத்தைக் குறைக்க போதுமானளவு தூக்காத்தை உறுதி செய்வதும் அவசியம், இல்லையெனில் PCOSஇன் அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும்.
மருத்துவ சிகிச்சைகள்
கர்ப்பம்தரிக்க திட்டமிடவில்லை என்றால், ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரை போன்ற ஹோர்மோன் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்துவது மாதவிடாய் சுழற்சிகளை சீராக்கவும், தெசுத்தெசுத்திரோன் அளவைக் குறைக்கவும், திட்டமிடப்படாத கர்ப்பங்களைத் தடுக்கவும் உதவும். கர்ப்பம் தரிக்க திட்டமிட்டால், நீரிழிவுக்கான மருந்து மெட்ஃபோர்மின் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதாகவும், மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதாகவும், கருவுறுதல் விகிதங்களை மேம்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கருவுறுதலை மேம்படுத்துவதற்கான பிற மருந்துகளில் க்ளோமிபீன் சிட்ரேட் அல்லது லெட்ரோசோல் ஆகியவை அடங்கும். அதிகப்படியான முடி வளர்ச்சியைக் குறைக்க, முகப்பரு மற்றும் ஆண்களைப்போன்ற முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த ஸ்பைரோனோலாக்டோன் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.
அறுவை சிகிச்சை முறை
கருவுறுதல் விகிதங்களை மேம்படுத்த, லேபராஸ்கோபிக் (சாவி-துளை அறுவை சிகிச்சை), கருப்பை துளையிடுதல் மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF) போன்ற அறுவை சிகிச்சை சிகிச்சைகள் செய்யப்படலாம்.
புதிய சிகிச்சை முறைகள்
PCOS அறிகுறிகளை நிர்வகிக்கக்கூடிய இனோசிட்டால் மற்றும் பெர்பெரின் போன்ற ஊட்டச்சத்து துணை நிரப்பிகள் தொடர்பிலான ஆதாரங்கள் வளர்ந்து வருகின்றன. இருப்பினும், PCOS நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான இவற்றின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை புரிந்துகொள்ள கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
PCOS ஒரு சிக்கலான நிலை என்றாலும், அதன் அறிகுறிகளை திறம்பட நிர்வகிக்க பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகள் PCOS உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம். பெண்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் குறிக்கோள்களை நிவர்த்தி செய்யும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டத்தை உருவாக்க தங்கள் சுகாதார வழங்குநர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது அவசியம். சமீபத்திய சிகிச்சை முறைகளைப் பற்றி அறிந்திருப்பதன் மூலமும், நடைமுறையில் உள்ள வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலமும், PCOS உள்ள பெண்கள் ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.
எழுத்தாக்கம்
இலங்கை குடும்பத்திட்ட சங்கம்